ரூ.13 லட்சம் மதிப்பிலான வேன் வழங்கிய கிராம மக்கள்


ரூ.13 லட்சம் மதிப்பிலான வேன் வழங்கிய கிராம மக்கள்
x

ஒரத்தநாடு அருகே அரசு பள்ளிக்கு சொந்தமாக கிராம மக்கள் ரூ.13 லட்சம் மதிப்பிலான வேனை வழங்கினர்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

ஒரத்தநாடு அருகே அரசு பள்ளிக்கு சொந்தமாக கிராம மக்கள் ரூ.13 லட்சம் மதிப்பிலான வேனை வழங்கினர்.

அரசு உயர்நிலைப்பள்ளி

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பூவத்தூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பூவத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த சுமார் 190 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதைப்போல இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் ஆங்கில மழலையர் பள்ளியில் 185 மாணவர்களும் படித்து வருகின்றனர்.இந்தநிலையில் பள்ளியின் வளர்ச்சிக்காக பூவை கல்வி வளர்ச்சி குழு மற்றும் பொதுநல அறக்கட்டளை என்ற பெயரில் பூவத்தூர் கிராம இளைஞர்கள், கிராமமக்கள், வெளிநாட்டில் உள்ளவர்கள், முன்னாள் மாணவர்கள் கல்வித்துறை, ஆசிரியர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

ரூ.13 லட்சம்

இந்த பள்ளியின் தேர்ச்சி சதவீதம் மற்றும் மாணவர்கள் சேர்க்கையும் அதிகரிக்க வேண்டும் என கிராமமக்கள் முடிவெடுத்து, பூவை கல்வி வளர்ச்சி குழு மற்றும் பொதுநல அறக்கட்டளை சார்பில் ரூ.13 லட்சம் செலவில் பள்ளி பெயரில் புதிய வாகனம் (வேன்) ஒன்றை வாங்கி நேற்று பள்ளிக்கு வழங்கினர். இதன்மூலம் தனியார் பள்ளிக்கு செல்லும் மாணவர்களை போல இந்த அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களும் வீட்டில் இருந்து புறப்பட்டு வேன் மூலம் பள்ளிக்கு சென்று வர வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.புதிய ேவன் இயக்க விழாவில் தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சிவக்குமார் புதிய பள்ளி வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்துக்கொண்டனர்.


Next Story