அரசு பஸ்- வேன் மோதியதில் டிரைவர் பலி
அரசு பஸ்- வேன் மோதியதில் டிரைவர் பலி
உடுமலை
உடுமலை அருகே அரசு பஸ்-வேன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் வேனை ஓட்டி வந்தவர் உயிரிழந்தார். மேலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
குலதெய்வ கோவிலுக்கு சென்றனர்
கோவை மாவட்டம் ஆழியார் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 51). அப் பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி ஆழியாரில் இருந்து வாடகை வேனில் சீனிவாசன், அவரது மனைவி ராஜேஸ்வரி (50), மகள் பூர்விதா ( 16) மற்றும் சீனிவாசனின் தந்தை வேணுகோபால் (75), சீனிவாசனின் தாயார் சிங்காரம் ( 70) ஆகியோருடன் கோவிலுக்கு சென்றார். வேனை ஆழியார் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த சதீஷ் என்ற ரித்தீஷ் ( 25) ஓட்டி வந்தார். அனைவரும் குலதெய்வம் கோவிலுக்கு போய் விட்டு நேற்று மதியம் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
நேருக்கு நேர் மோதல்
இந்த வேன் உடுமலையை அடுத்த பாலப்பம்பட்டி அருகே வந்தது. அப்போது டிரைவர் சதீஷ் முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே உடுமலையில் இருந்து பழனி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது வேன் பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன் பகுதி அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 6 பேரும் ரத்த வெள்ளத்தில் அலறினர். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வேனில் பயணம் செய்த 6 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
டிரைவர் பலி
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சதீஷ், ராஜேஸ்வரி, சிங்காரம் ஆகிய மூவரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் டிரைவர் சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.