வேன், மோட்டார் சைக்கிள் மோதல்:ஓட்டல் உரிமையாளர் பலி
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் ஓட்டல் உரிமையாளர் பலியானார். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் ஓட்டல் உரிமையாளர் பரிதாபமாக இறந்தார். மனைவி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஓட்டல் உரிமையாளர்
தூத்துக்குடி 2-ம் கேட் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசகம். இவருடைய மகன் அய்யப்பன் (வயது 45). இவர் அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலையில் தனது மனைவி அருள்ராணி (33), மகன் பிரின்ஸ் (1), அருள்ராணியின் அக்காள் மகன் ரஞ்சித் (12) ஆகியோர் ரோச் பூங்காவுக்கு சென்று உள்ளனர். பின்னர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு உள்ளனர்.
சாவு
அவர்கள் பூங்கா வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து ரோட்டில் திரும்பி சென்ற போது, பின்னால் வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அய்யப்பன் நேற்று அதிகாலையில் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.