வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்


வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்
x

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நாளை நடைபெற உள்ள அ.தி. மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

சென்னை,

ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை (வியாழக்கிழமை) சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அந்த மண்டபத்திற்கு செல்லும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பேனர்கள் வைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. எனவே, திருமண மண்டபம் அமைந்துள்ள அயனம்பாக்கம் சாலையில் மட்டுமே தலைவர்களை வரவேற்பதற்கான பேனர்கள் மற்றும் தோரணங்கள் அமைக்கப்படுகின்றன. குறிப்பாக, மண்டபத்தின் வளாகத்திற்கு வெளியே சாலையின் இருபுறமும் தடுப்புக்கட்டைகள் அமைத்து மதில் சுவர் போன்ற வடிவமைப்பில் பிரமாண்ட பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எடப்பாடி பழனிசாமி,ஓ.பன்னீர்செல்வம் பேனர்கள்

இதேபோன்று மண்டபத்தின் நுழைவு வாயில் உள்ளிட்ட 3 இடங்களில் பிரமாண்ட வளைவுகள் அமைக்கப்பட உள்ளன. அதில் அ.தி.மு.க. தலைமை அலுவலக கட்டிடம், நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் தமிழக சட்டமன்ற கட்டிடம் போன்று வடிவமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற மறைந்த தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டத்திற்கு வருபவர்களை வரவேற்பது போன்ற புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

மேலும், பேனர்களில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு மலர் கொத்து கொடுப்பது போன்ற புகைப்படமும், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு மலர் கொத்து கொடுப்பது போன்ற புகைப்படமும் இடம் பெற்றுள்ளன.

அழைப்பிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி

செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் கார்களை தவிர வேறு யாருடைய காரும் மண்டப வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டாது என்று கூறப்படுகிறது. அவர்கள் 2 பேரை தவிர அனைவரின் கார்களும் சிவாஜி பார்க்கிங், ராதாகிருஷ்ணன் பார்க்கிங், தேவி பார்க்கிங், பத்மாவதி மண்டப பார்க்கிங் உள்பட 6 இடங்களில் நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கூட்டத்திற்கு அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

மண்டபத்திற்கு வரும் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை வரவேற்பதற்கான சிறப்பு பந்தல் மற்றும் சாப்பாடு சாப்பிடுவதற்காக சுமார் 50 ஆயிரம் சதுர அடியில் பந்தல் மற்றும் சமையல் செய்வதற்கான பந்தல்கள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு வெளியே தலைவர்களை வரவேற்பதற்காக தயாராகி வரும் பேனர்கள் மற்றும் தோரணங்கள் அமைக்கும் பணிகளை முன்னாள் அமைச்சர் பென்ஜமின் பார்வையிட்டு முன்னின்று நடத்தி வருகிறார்.


Next Story