வாணாபுரம் பகுதிகளில் குறித்த நேரத்திற்குள் தபால்கள் கிடைப்பதில்லை


வாணாபுரம் பகுதிகளில் குறித்த நேரத்திற்குள் தபால்கள் கிடைப்பதில்லை
x

வாணாபுரம் பகுதிகளில் குறித்த நேரத்திற்குள் தபால்கள் கிடைப்பதில்லை என்று பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரத்தை மையமாக கொண்டு மழுவம்பட்டு, பேரயம்பட்டு, குங்கிலியநத்தம், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியை மையமாக கொண்டு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் தபால்களை இங்கிருந்து உரியவரிடம் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில மாதங்களாக தபால்கள் சரியான முறையில் உரியவரிடம் வழங்குவதில்லை என்றும், மேலும் ஆட்கள் இருந்தாலும் அவர்கள் இல்லை என்றும் உடனடியாக தபால்களை மீண்டும் வந்த இடத்திற்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

தனியார் கூரியர் நிறுவனங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், முக்கிய ஆவணங்களை தபால் அலுவலகங்கள் மூலம் நாங்கள் பெற்று வருகிறோம். அந்த வகையில் எங்கள் பகுதிகளில் அஞ்சலகங்கள் மூலம் பல்வேறு பகுதிகளில் இருந்து தபால்கள், ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்டவைகள் வருகிறது. அவற்றை வாங்க வேண்டும் என்றால் தபால்காரரிடம் பலமுறை தெரிவிக்கப்பட்டும், அவர்கள் கண்டு கொள்வதில்லை.

எங்களுடைய உறவினர்களிடமோ அல்லது எங்களை சார்ந்தவர்களிடமோ கொடுத்துவிட்டு போங்கள் என்று தெரிவித்தாலும் கண்டுகொள்ளவில்லை. மேலும் தபால் வந்தது தெரிந்து தபால்காரரிடம் கேட்டால் குறிப்பாக பாஸ்போர்ட் வந்தால் அதற்கு ஒரு தொகையும், புத்தகங்கள் மற்றும் பொருட்கள் ஏதேனும் வந்தால் அதற்கு ஒரு தொகையும் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட தலைமை அஞ்சல் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு குறித்த நேரத்தில் வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தபால்களை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story