வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீர்யானை தாக்கியதில் ஊழியர் படுகாயம்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீர்யானை தாக்கியதில் ஊழியர் படுகாயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
வண்டலூர்,
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மொத்தம் 7 நீர்யானைகள் பராமரிக்கப்படுகிறது. இந்த நீர்யானைகள் மற்றும் அதனுடைய இருப்பிடத்தை பராமரிக்கும் பணியில் பூங்காவின் நிரந்தர பணியாளர் வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டேரி பகுதியை சேர்ந்த குமார் (வயது 54) என்பவர் ஈடுபட்டு வந்தார்.
நீர் யானை கவ்வியது
நேற்று காலை வழக்கம் போல உயிரியல் பூங்காவுக்கு குமார், வேலைக்கு சென்றார். நீர் யானைகள் உலாவரும் தண்ணீர் தொட்டிகளை 15 நாளைக்கு ஒருமுறை சுத்தம் செய்வது வழக்கம். நேற்று தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தண்ணீரில் விளையாடி கொண்டிருந்த நீர்யானைகளை ஊழியர் குமார் வழக்கமாக அவர் பேசும் மொழியில் அதனுடைய இருப்பிடத்தில் அடைப்பதற்கு முயற்சி செய்தார். அப்போது ஆத்திரம் அடைந்த ஒரு பெண் நீர்யானை திடீரென ஆவேசம் அடைந்து ஊழியர் குமாரை விரட்டியது. அதிர்ச்சி அடைந்த குமார் அலறி அடித்துகொண்டு நீர்யானை இருப்பிட சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து தப்பி விடலாம் என்று நினைத்து சுற்றுச்சுவர் மீது ஏறினார். அப்போது திடீரென அந்த பெண் நீர்யானை குமாரின் இடுப்பு பகுதியை கவ்வியது. இதில் நீர்யானையின் பற்கள் குமார் அணிந்து இருந்த ஆடையில் மாட்டி நீர்யானையிடம் சிக்கி கொண்டார். அவரை நீர்யானை கீழே தள்ளியது.
படுகாயம் அடைந்தார்
குமார் சத்தம் போட்டபடியே நீர்யானையிடம் இருந்து தப்பித்து பிழைப்பதற்காக தரையில் படுத்து கொண்டார். ஆனால் ஆவேசமடைந்த நீர்யானை குமாரின் பின்பக்க பகுதி, முதுகு, கழுத்து, காது உள்ளிட்ட பகுதிகளில் கடித்தது. இதில் நீர்யானையின் பற்கள் குமாரின் உடலில் பல பகுதிகளில் இறங்கியது. அவரது அலறல் சத்தம் கேட்டு பூங்காவில் இருந்த சக ஊழியர்கள் ஓடி வந்து நீர்யானையை விரட்டினர். படுகாயம் அடைந்த குமாரை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.