பரமக்குடியில் வண்டி மாகாளி திருவிழா
பரமக்குடியில் வண்டி மாகாளி திருவிழா நடந்தது.
பரமக்குடி,
பரமக்குடி முத்தாலம்மன் கோவில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் நான்காம் நாள் மண்டகப்படியாக வன்னியர் குல சத்திரிய சேர்வைக்காரர்களால் நடத்தப்படும் வண்டி மாகாளி திருவிழா நடந்தது. அதையொட்டி முத்தாலம்மன் மாகாளி அலங்காரத்தில் எழுந்தருளி சின்னக்கடை தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வேடங்கள் பூண்டு மாகாளி திருவிழா நடைபெற்றது. மாலையில் ஆண்கள், பெண்கள் போல் வேடமிட்டு உடல் முழுவதும் வண்ணங்களை பூசி அலங்கரிக்கப்பட்ட மாட்டுவண்டியின் மேல் நின்று ஆடி வந்தனர். இந்த வண்டி மாகாளி திருவிழாவானது சின்னக்கடை பகுதியில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து முத்தாலம்மன் கோவிலை வந்தடைந்தது. பின்பு கோவிலை சுற்றி வலம் வந்து மீண்டும் சின்ன கடை பகுதியை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை வன்னியர் குல சத்ரிய மகாசபையின் தலைவர் மனோகரன், செயலாளர் மணவாளன் உள்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.