வாழப்பாடி அருகேவங்கா நரிப்பொங்கல் கொண்டாட்டம்பொதுமக்கள் வர்ணம் பூசி மகிழ்ந்தனர்


வாழப்பாடி அருகேவங்கா நரிப்பொங்கல் கொண்டாட்டம்பொதுமக்கள் வர்ணம் பூசி மகிழ்ந்தனர்
x

வாழப்பாடி அருகே வங்கா நரிப்பொங்கல் கொண்டாடப்பட்டது. இதை காண குவிந்த பொதுமக்கள் வர்ணம் பூசி மகிழ்ந்தனர்.

சேலம்

வாழப்பாடி,

நரிப்பொங்கல்

தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி கிராமங்களில் நரியை தெய்வமாக வணங்கி வினோத வழிபாடு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் வாழப்பாடி அருகே உள்ள கொட்டவாடி கிராம மக்கள் நரி முகத்தில் விழிக்கும் நரியாட்டம் என்று சொல்லக்கூடிய நரிப்பொங்கல் திருவிழாவை கொண்டாடினர்.

இந்த கொண்டாட்டம் அடங்குவதற்குள், நேற்று வாழப்பாடி அருகே உள்ள சின்னமநாயக்கன்பாளையம் பகுதியிலும் பொதுமக்கள், நரிப்பொங்கல் திருவிழாவை கொண்டாடினர். மாலையில் சின்னமநாயக்கன்பாளையம் கிராம மக்கள் வலையில் சிக்கிய வங்காநரியை கூண்டில் அடைத்து ஊர்வலமாக மேளதாளத்துடன் தூக்கி சென்றனர்.

அப்போது இந்த பகுதி கிராம மக்கள் மற்றும் வாலிபர்கள் உடலில் வர்ணங்கள் பூசியும், மேளதாளம் முழங்க நடனமாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் நரியை பிடித்த இடத்திலேயே பொதுமக்கள் கொண்டு சென்று விட்டு விட்டனர்.

நரி முகத்தில் விழித்தால் நல்ல பலன் கிடைக்கும், விளைச்சல் அதிகரிக்கும், நல்ல மழை பெய்து விவசாயம் மற்றும் அதனை சார்ந்த அனைத்து தொழில்களும் செழிக்கும் என்ற நம்பிக்கை இந்த கிராம மக்கள் மத்தியில் தொடர்ந்து நிலவி வருகிறது.

வனச்சரகர் விளக்கம்

நரிப்பொங்கல் குறித்து வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன் கூறும் போது, 'நரி பிடித்தால் சிறை என்றும், வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என பலமுறை பொதுமக்களுக்கு எச்சரித்து உள்ளோம். இருப்பினும் வாழப்பாடி பகுதியில் நரியை வைத்து நடந்து வரும் பொங்கல் நரியாட்டம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது' என்றார்.


Next Story