வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம்: சட்டசபையில் காரசார விவாதம்


வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம்: சட்டசபையில் காரசார விவாதம்
x

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சட்டசபையில் காரசார விவாதம் நடந்தது.

சென்னை,

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான ஆணையத்தின் காலக்கெடு 6 மாதம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நேற்று முன்தினம் சட்டசபையில் பா.ம.க. இதை வலியுறுத்தி வெளிநடப்பு செய்தது. இந்த நிலையில் சட்டசபையில் நேற்று காலை நேரமில்லா நேரத்தில் பா.ம.க. உறுப்பினர் ஜி.கே.மணி, வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து பேச தொடங்கினார்.

அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

6 மாத நீட்டிப்பு

ஜி.கே.மணி (பா.ம.க.):- வன்னியர் சமுதாயத்துக்கான 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக அரசு அறிவித்துள்ள ஆணையத்தின் பதவி காலத்தை 6 மாதம் நீட்டிக்க தேவையில்லை. ஒரு மாதம் நீட்டித்தாலே போதும். இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. வரும் கல்வியாண்டில் இட ஒதுக்கீடு அமல்படுத்தவி்ல்லை என்றால் மருத்துவ படிப்பு மற்றும் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளில் இட ஒதுக்கீடு பெறமுடியாமல் போய்விடும். எனவே ஆணையத்தை மேலும் 6 மாதத்துக்கு நீட்டித்திருப்பதை ஏற்க முடியாது.

அண்மையில் நடைபெற்ற அரசு தேர்வுகளில் டி.எஸ்.பி., சப்-கலெக்டர் தேர்வில் ஒரு வன்னியர் கூட தேர்ச்சி பெறவில்லை. இது எவ்வளவு பெரிய அநீதி?.

ஜி.கே.மணி பாராட்டினார்

முதல்-அமைச்சர்மு.க. ஸ்டாலின்:- இதே பிரச்சினை குறித்து ஜி.கே.மணி ஏற்கனவே எழுப்பி இருக்கிறார். இது தொடர்பான துறையின் மானிய கோரிக்கை இன்று (நேற்று) வருகிறது. அதில் பேசுங்கள் என்றோம். ஆனாலும் இந்த பிரச்சினையை இப்போது எழுப்பி உள்ளார். கருணாநிதி இருந்தபோது இட ஒதுக்கீடு தந்தார் என்று பெருமையாக கூறினார்.

இப்போது 10.5 சதவீத இட ஒதுக்கீடு எந்த சூழ்நிலையில் கொண்டு வரப்பட்டது என்பதை பார்க்க வேண்டும். இது முறையாக அமல்படுத்தப்படுமா? என்று பல சந்தேகங்கள் எழுந்தன. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் சமயத்தில் இந்த இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. அதனால்தான் கோர்ட்டில் தடை வந்துவிட்டது.

கோர்ட்டில் மேல்முறையீடு செய்தோம். அந்த ஆட்சி, இந்த ஆட்சி என்று பாராமல் உடனடியாக அமல்படுத்த தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றோம். அதற்காக ஜி.கே.மணி கூட நேரில் என்னை சந்தித்து தி.மு.க. அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்து இருப்பதாக பாராட்டினார்.

சுப்ரீம் கோர்ட்டு அதை தடை செய்தபோது சில வழிமுறைகளை தெரிவித்து உள்ளது. அதற்காக ஆணையம் அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. ஆணையத்தின் விருப்பத்தின் படிதான் இப்போது காலநீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது.

அமைச்சர் கருத்து நீக்கம்

ஜி.கே.மணி (பா.மக..):- முதல்-அமைச்சர் 10.5 சதவீத இடஓதுக்கீட்டை செயல்படுத்துவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும். டாக்டர் ராமதாஸ் ஒரு நாள்கூட முதல்-அமைச்சருக்கு எதிராக கருத்து பதிவிட்டதில்லை. முதல்-அமைச்சரை பாராட்டியே வருகிறார்.

(அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சில கருத்துக்களை தெரிவித்தார். இந்த கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது)

அவை முன்னவர் துரைமுருகன்:-சமூக நீதியை காப்பதில் அனைத்து கட்சிக்கும் பங்கு உண்டு. வன்னியர் உள் ஒதுக்கீடு அ.தி.மு.க. ஆட்சியில் அவசரமாக வெளியிட்டாலும் அதனை தி.மு.க. ஆட்சியிலும் செயல்படுத்தினோம். மீண்டும் அந்த தவறு வந்துவிடக்கூடாது என்பதற்காக 6 மாத கால அவகாசம் வழங்கியுள்ளோம். ஆணையம் 4 மாதத்திலே அறிக்கை தந்தால் உங்களை விட முதல்-அமைச்சர் மகிழ்ச்சியடைவார்.

வேல்முருகன்:- ஒட்டுமொத்த வன்னியர்களும் தி.மு.க.பக்கமே இருக்கிறார்கள்.

அ.தி.மு.க. உறுப்பினர் எதிர்ப்பு

(இதற்கு அ.தி.மு.க. உறுப்பினர் கே.பி.முனுசாமி எதிர்ப்பு தெரிவித்தார்)

உறுப்பினர் கே.பி.முனுசாமி (அ.தி.மு.க.) :- வன்னியர் இட ஒதுக்கீடு உணர்வுப்பூர்வமான பிரச்சினை என்பதால் பொறுமையாக கையாள வேண்டும். முதல்-அமைச்சரும், துரைமுருகனும் அழகாக விளக்கம் அளித்து உள்ளனர். அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் வேல்முருகன் கூறிய கருத்துக்களை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்:- வேளாண் துறை அமைச்சர் பேசிய கருத்துக்கள் நீக்கப்பட்டு விட்டது. ஆனால் வேல்முருகன் யாரையும் எந்த கட்சியும் குறிப்பிட்டு பேசவில்லை.

செல்வபெருந்தகை (காங்கிரஸ்) :-1989-ம் ஆண்டு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கருணாநிதியை சந்தித்து இட ஒதுக்கீட்டின் கதாநாயகன் என கூறி மகாராஜா இருக்கையை வழங்கினார்.

உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி (விடுதலை சிறுத்தைகள்):- இட ஒதுக்கீடு என்று சொன்னால் அதனை ஏற்படுத்தி தந்தவர் கருணாநிதிதான். ஒட்டுமொத்தமாக 20 சதவீதம் இருப்பது வன்னியர்களுக்கு நல்லதா அல்லது 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு இருப்பது நல்லதா என்பதை முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

உறுப்பினர் கே.பி.முனுசாமி (அ.தி.மு.க.) :- இட ஒதுக்கீடு கொள்கையில் திராவிட இயக்கங்கள் அவரவர் ஆட்சியில் மிகப்பெரிய பங்கை அளித்திருக்கிறது. ஜெயலலிதாதான் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை பெற்றுக்கொடுத்தார்.

இவ்வாறு விவாதம் நடந்தது.


Next Story