வரதராஜ பெருமாள் கோவில் குடமுழுக்கு
வேளாங்கண்ணி அருகே வரதராஜ பெருமாள் கோவில் குடமுழுக்கு
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே பாலக்குறிச்சியில் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு நடத்துவதற்கு கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி பாலாலயம் நடைபெற்றது. குடமுழுக்கை முன்னிட்டு கடந்த 14-ந்தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லெஷ்மி ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து யாகசாலை பூஜைகளுடன் பூர்ணாகுதி தீபாராதனைகள் நடைபெற்றது. நேற்று நான்காம் கால யாகசாலை பூஜை முடிவுற்று மஹா பூர்ணாகுதி நடைபெற்று யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. இதில் பட்டாச்சாரியார்கள் கடங்களை சுமந்து வந்து வேத மந்திரங்கள் முழங்க கோவில் கலசத்தை கருட பகவான் சுற்றிவர வரதராஜ பெருமாள் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ தேவி, பூமிதேவி, பெருந்தேவி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கலச நீர் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என மனம் முருகி கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.