மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் மற்றும் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 20 பெண்கள் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் மற்றும் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 20 பெண்கள் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
பதவி விலக...
மணிப்பூர் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகள் பதவி விலக வேண்டும். மணிப்பூரில் வாழும் பழங்குடியின மக்களுக்கு நீதி வழங்கிட வேண்டும். 2 பெண்களை கற்பழித்த வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும்.
பழங்குடியின மக்களுக்கு எஸ்.சி, எஸ்.டி சட்டத்தின் படி ஆயுதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரெயில் மறியலுக்கு முயற்சி
இதில் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் திருச்சியில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக ஜங்ஷன் ரவுண்டானாவில் குவிந்தனர். பின்னர் கழக நிறுவன தலைவர் வக்கீல் பொன் முருகேசன் தலைமையில் நிர்வாகிகள் ரெயில்நிலையம் நோக்கி புறப்பட்டனர். தடையை மீறி ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் கென்னடி தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் திருச்சி மாவட்ட செயலாளர் பிரவீன், கரூர் மாவட்ட தலைவர் சக்திவேல் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
தலைமை தபால் நிலையம்
இதேபோல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம், மாணவர் சங்கம், விவசாய சங்கம், மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் லெனின், மாதர் சங்க மாவட்ட தலைவர் பொன்மகள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் கனல் கண்ணன், எஸ்.எப்.ஐ மாவட்ட தலைவர் சூர்யா, விவசாய தொழிலாளர் சங்க தலைவர் தங்கதுரை ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் இவர்கள் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்தனர். இதில் 20 பெண்கள் உள்பட 42 பேர் கைது செய்யப்பட்டனர்.
காங்கிரஸ் வக்கீல் பிரிவு
திருச்சி கோர்ட்டு முன்பு திருச்சி காங்கிரஸ் வக்கீல்கள் பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் வக்கீல் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். இதில் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் முன்னிலை வகித்து கண்டன உரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் கிருபாகரன் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
தவ்ஹீத் ஜமாத்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பாலக்கரை ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் குலாம் தஸ்தஹீர் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் பேசும்போது, மணிப்பூரில் கலவரங்களில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என்றார். முடிவில் மாவட்ட செயலாளர் ஜாகீர் நன்றி கூறினார். இதில் பெண்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
மனிதநேய மக்கள் கட்சி
திருச்சி மாவட்ட மனித நேய மக்கள் கட்சி சார்பில் திருச்சி பாலக்கரையில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் பைஸ்அகமது, முகமது ராஜா ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அப்துல்சமது கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் சுரேஷ், பாதிரியார் சார்லஸ், ராபர்ட் கிறிஸ்டி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், மணிப்பூர் மாநில வன்முறையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
திருவெறும்பூர்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் காட்டூர் பகுதி குழு சார்பில் திருவெறும்பூர் நவல்பட்டு ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காட்டூர் பகுதி செயலாளர் சந்தோஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் மணிப்பூர் அரசுகளை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.