அருணாசலேஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேக விழா


அருணாசலேஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேக விழா
x

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந்தேதி ரோகிணி நட்சத்திர நாளில் கும்பாபிஷேகம் நடந்தது.

ஆகம விதிகளின்படி எந்த தமிழ் மாதத்தில் எந்த நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததோ அதே மாதம் அதே நட்சத்திர நாளில் வருஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தை மாதம் ரோகிணி நட்சத்திரம் நேற்று வந்தது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 6 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு வருஷாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு கோவிலில் சாமி சன்னதியில் முதல் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து 2-ம் கால பூஜை நடந்தது.

தொடர்ந்து அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. பின்னர் மாலை 6 மணிக்கு மேல் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் வீதி உலா நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் நாட்டுக்கோட்டை நகரத்தார், உபயதாரர்கள் செய்து இருந்தனர்.


Next Story