கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் வசந்த உற்சவம்
திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் நடந்த வசந்த உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவெண்காடு:
திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் நடந்த வசந்த உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ரங்கநாத பெருமாள் கோவில்
திருவெண்காடு அருகே திருநகரியில் கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவில் திருமங்கை ஆழ்வார்,குலசேகர ஆழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலாகும். இங்கு யோக மற்றும் ஹிரண்ய நரசிம்மர்கள் சன்னதி உள்ளது.
திருமங்கை ஆழ்வார் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். மேலும், பஞ்ச நரசிம்மர் கோவில்களில் இரணியன் நரசிம்மர் மற்றும் யோக நரசிம்மர் சுவாமிகள் தனிசன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலில் அக்னி நட்சத்திர காலத்தில் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
வசந்த உற்சவம்
அதன்படி அக்னி நட்சத்திரம் தொடங்கியதையொட்டி பெருமாள் மற்றும் திருமங்கை ஆழ்வார் நந்தவனத்தில் எழுந்தருளினர். இதைத் தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் பாராயணம் செய்தனர். இதை அடுத்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
அக்னி நட்சத்திரம் முடியும் வரை நந்தவனத்தில் பக்தர்களுக்கு பெருமாள் மற்றும் திருமங்கை ஆழ்வார் காட்சியளிக்கின்றனர்.