பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் வசந்த மண்டபம் கட்டப்படுமா?
பெரம்பலூரில் மதனகோபாலசுவாமி கோவிலில் வசந்த மண்டபம் கட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மதனகோபால சுவாமி கோவில்
பெரம்பலூரில் 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புகழ்பெற்ற மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ளே செல்லும்போது ராஜகோபுர நுழைவு வாயிலின் வலது புறத்தில் கம்பத்து ஆஞ்சநேயர் சன்னதியின் வடக்கு பகுதியில் இருந்த பழமையான வசந்த மண்டபம் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28-ந் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் சேதமடைந்து உடைந்து விழுந்தது.
இந்த விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள மரச்சாமான்கள் எரிந்து நாசமாகின. மேலும், இந்த விபத்தில் பக்தர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. இதனைதொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு கோவிலில் 7 நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டு சொர்க்கவாசலுடன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
வசந்தமண்டபம்
இந்த நிலையில் தீவிபத்தில் சேதமடைந்து தரைமட்டமான வசந்த மண்டபத்தை புதுப்பித்து பழமை மாறாமல் கல்தூண்களுடன் புதிய மண்டபமாக கட்டித்தர வேண்டும் என்று இந்துசமய அறநிலைத்துறையினருக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:-
லட்சுமணன்:- பெரம்பலூர் நகருக்கு அழகும், பெருமையும் சேர்ப்பது மதனகோபாலசுவாமி கோவில் ஆகும். பங்குனி உத்திரம், வைகுண்ட ஏகாதசி மற்றும் உற்சவ காலங்களில் கோவில் முன்புறம் இருந்த வசந்தமண்டபத்தில் வைத்து உற்சவபெருமாள், தாயார் சிலைகளுக்கு அலங்காரம் செய்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். வசந்த மண்டபத்தில் இருந்த அனுமார் சிலையையும் பக்தர்கள் வழிபடுவது வழக்கம். கோவில் முன்புறம் கலையிழந்து போய் உள்ள பகுதியில் வசந்தமண்டபத்தை மீண்டும் கட்டித்தர தமிழக அரசும், இந்து சமய அறநிலைய துறை ஆணையரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிதி ஒதுக்க வேண்டும்
சரவணன்:- வசந்தமண்டபம் தீவிபத்தில் சிதிலமடைந்து 10 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இனியும் காலம் தாழ்த்தாமல் கோவில் வசந்தமண்டபம் கட்டுமான பணிகளுக்கு போர்க்கால அடிப்படையில் நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும்.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
வைத்தீஸ்வரன்:- தற்போது நகராட்சி மூலம் தெற்குத்தெரு, சின்ன தெற்குத்தெரு, ஸ்டாம்பு வெண்டர் தெரு உள்ளிட்ட பகுதிகளின் சேகரமாகும் குப்பைகளை வசந்தமண்டபம் இருந்து பகுதியில் மலைபோல் குவித்து வைத்துள்ளதால், கோவிலின் சுற்றுச்சூழல் சீர்கேடு அடைகிறது. குப்பைகள் சேகரமாகும் இடமாக வசந்தமண்டபம் மாறிவிட்டது வேதனைக்குரியதாகும். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று வசந்தமண்டபம் கட்டுமானத்திற்கான திட்டமிடல், திட்டப்பணிகளை தொடங்க வேண்டும்
கரையான்கள்...
குமார்:- பழுதான பழைய தேரில் இருந்து அகற்றப்பட்ட சிதிலம் அடைந்த மரச்சிற்பங்கள், மரச்சட்டங்கள், குறுக்கு விட்டங்கள் வசந்தமண்டபம் இருந்த இடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனை அறநிலையத்துறையினர் ஏலம் விடாததால், பலஆண்டுகளாக வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்து மரப்பொருட்கள் உருக்குலைந்து கரையான்களுக்கு இரையாகி வருகின்றன. இதில் மீண்டும் ஒரு அசம்பாவிதம் நடக்கும் முன்பாக குவித்து வைக்கப்பட்டுள்ள மரப்பொருட்களை அகற்றுவதற்கு அறநிலையத்துறை உயர் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.