வட்டக்குளம் அய்யனார், ஒட்டத்தெரு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


உடையார்பாளையத்தில் வட்டக்குளம் அய்யனார், ஒட்டத்தெரு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சோழங்குறிச்சி சாலையில் வட்டக்குளம் அய்யனார், ஒட்டத்தெரு மாரியம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு மூலஸ்தானம், பரிவார தெய்வங்கள் புதுப்பிக்கப்பட்டு வர்ணங்கள் பூசப்பட்டன. நேற்று முன்தினம் யாக சாலை அமைக்கப்பட்டு முதற்கால யாக பூஜைகள், விநாயகர் வழிபாடு, புண்ணியா வாகனம், வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம், ரக்‌ஷாபந்தனம், கடஸ்தாபனம், வேதிகா அர்ச்சனை, திரவியஹோமம்,பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு 2-ம் கால யாகபூஜைகள் விநாயகர் வழிபாடு, சூரிய, சந்திர பூஜை, லட்சுமி பூஜை, நாடிசந்தானம், மூலமந்திர ஹோமம், திரவியஹோமம், வேதிகா அர்ச்சனை, மகா பூர்ணாகுதி, தீபாராதனைகள் நடந்தது. காலை 9.30 மணிக்கு மேல் மேளதாளங்கள் முழங்க கடம்புறப்பாடு நடந்தது. பின்னர் கலசத்திற்கு வஸ்திரம் சாத்தப்பட்டு சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்களை முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அதன்பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் காலை 6 மணியளவில் ஒட்டத்தெரு மாரியம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் உடையார்பாளையம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story