வவ்வாலடி கிராமத்தை நீர்வளம் நிறைந்த கிராமமாக மாற்ற வேண்டும்


வவ்வாலடி கிராமத்தை நீர்வளம் நிறைந்த கிராமமாக மாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 2 May 2023 12:15 AM IST (Updated: 2 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வவ்வாலடி கிராமத்தை நீர்வளம் நிறைந்த கிராமமாக மாற்ற வேண்டும் என கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பேசினாா்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

வவ்வாலடி கிராமத்தை நீர்வளம் நிறைந்த கிராமமாக மாற்ற வேண்டும் என கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பேசினாா்.

கிராம சபை கூட்டம்

திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சிக்குட்பட்ட வவ்வாலடி கிராமத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கலந்து கொண்டு பேசுகையில், கிராமத்தை ஆக்கப்பூர்வமாக கொண்டு செல்வதே கிராம சபை கூட்டமாகும்.

இக்்கூட்டமானது கிராம மக்களுக்கு அரசின் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்கள் குறித்து விளக்கி விவாதம் செய்து கருத்தரியும் கூட்டமாக நடைபெற்று வருகிறது.

இந்த கிராமசபை கூட்டத்தில் மக்களுக்கு எல்லா விஷயங்களும் தெளிவாக தெரியப்படுத்தப்பட வேண்டும். கூட்டத்தின் முக்கிய நோக்கம் நமக்கு தேவையான திட்டங்கள் என்ன என்பதை முதலில் பொதுமக்களாகிய நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இந்த ஆண்டு 100 நாள் வேலையில் என்ன திட்டம் செயல்படுத்த வேண்டும் என்ற உங்களுடைய அனைத்து கருத்துகளையும் தெரிவிக்கலாம்.

நீர்வளம் நிறைந்த கிராமமாக...

வவ்வாலடி கிராமத்தை நீர்வளம் நிறைந்த கிராமமாக உருவாக்க வேண்டும். அதற்கு இக்கிராமத்தில் உள்ள குளங்களை தூர்வாரி ஆழப்படுத்துவது மற்றும் பண்ணை குட்டைகள் அமைப்பதன் மூலமாகவும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திட முடியும். நமக்கு மட்டுமின்றி வருங்கால சந்ததியினருக்கும் பயன்படும் வகையில் நீர்வளத்தை பாதுகாத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து எங்கள் கிராமம் எழில்மிகு கிராமம் என்ற உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் எடுத்துக்கொண்டனர்.

விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

மேலும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் நம்ம ஊரு சூப்பரு திட்டம் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி மற்றும் குளம் தூய்மை பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் பிரதிவிராஜ் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சவுந்தரராஜன், நாகை தாசில்தார் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜவகர், பாலமுருகன், ஊராட்சி மன்றத்தலைவர் கார்த்திகேயன், அரசு அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story