வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து நூற்றாண்டு நிறைவு விழா; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு


வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து நூற்றாண்டு நிறைவு விழா; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
x
தினத்தந்தி 8 May 2023 12:15 AM IST (Updated: 8 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் யூனியனுக்கு உட்பட்ட வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து நூற்றாண்டை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து அங்குள்ள புனித தோமையார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த விழாவில் நூற்றாண்டு நினைவு தூண் திறப்பு, நூற்றாண்டு தபால்தலை வெளியீடு, நூற்றாண்டு மலர் வெளியீடு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்சிசிக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட பஞ்சாயத்து தலைவி பிரம்மசக்தி, திருச்செந்தூர் யூனியன் துணை தலைவர் ரெஜிபர்ட் பர்னாந்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து தலைவர் எல்லமுத்து வரவேற்றார்.

விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நூற்றாண்டு நினைவு தூணை திறந்து வைத்து நூற்றாண்டு தபால் தலை மற்றும் நூற்றாண்டு மலரை வெளியிட்டும் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியும் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், "இந்தப்பகுதி பெருவாரியான மக்கள் கிறிஸ்தவ மதம் சார்ந்தவர்களாக இருப்பினும் அனைத்து தரப்பு மக்களுடன் நல்லிணக்கமாக வாழ்ந்து வருவது பாராட்டுக்குரியதாகும். இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் பலர் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள். அந்த வகையில் நானும் இந்த ஊரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன்" என்றார்.

விழாவில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் வாமனன், பங்குத்தந்தை கிருபாகரன் அடிகளார், தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், பஞ்சாயத்து துணை தலைவர் ஜெகதீஸ் வி.ராயன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன், திருச்செந்தூர் நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார், முன்னாள் யூனியன் கவுன்சிலர் ஸ்ரீதர் ரொட்ரிக்கோ, ஊராட்சி செயலர் பட்டுக்கனி, ஊராட்சி உறுப்பினர்கள் முருகன், நவஜோதி, உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விழாக்குழு உறுப்பினர் ஹேமில்ட்டன் அ.காற்றார் நன்றி கூறினார்.


Next Story