வீரசக்தி அம்மன் கோவில் திருவிழா
வீரசக்தி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
தொண்டி,
திருவாடானை தாலுகா அடுத்தகுடியில் பிரசித்தி பெற்ற வீரசக்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பூக்குழி திருவிழா கடந்த மாதம் 20-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேகம் தீபாராதனைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை பக்தர்கள் கோவிலின் முன்பு பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மன் அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி அம்மனுக்கு லட்சார்ச்சனை, முடி இறக்குதல், மாவிளக்கு, கும்பிடு தனம், பால்குடம், காவடி எடுத்தல், அன்னதானம், வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சிகள், மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயமும் நடைபெற்றது. திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.