இறங்கு முகத்தில் காய்கறிகள் விலை


இறங்கு முகத்தில் காய்கறிகள் விலை
x

திண்டுக்கல்லில் தக்காளி, வெங்காயத்தை தவிர காய்கறிகளின் விலை இறங்குமுகத்தில் உள்ளது.

திண்டுக்கல்

தக்காளி, சின்ன வெங்காயம்

திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் குமரன் பூங்கா அருகே காந்தி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் 291 கடைகள் உள்ளன. திண்டுக்கல் மாவட்ட பகுதிகள் மற்றும் வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் காய்கறிகளை வியாபாரிகள் இங்கு விற்பனை செய்கின்றனர்.

வரத்து, தேவையை பொறுத்து மார்க்கெட்டில் காய்களின் விலை மாறுபடும். அதன்படி மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ தக்காளி அதன் தரத்தை பொறுத்து ரூ.80 முதல் ரூ.120 வரை விற்கப்பட்டது. சின்னவெங்காயம் கிலோ ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனை ஆனது. இவற்றின் வரத்து குறைந்ததால் விலை குறையவில்லை.

மொச்சை வரத்து

தக்காளி, சின்ன வெங்காயத்தை தவிர மற்ற காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ரூ.70-க்கு விற்ற ஒரு கிலோ கேரட் தற்போது ரூ.40-க்கும், ரூ.50-க்கு விற்ற முருங்கைக்காய் ரூ.25-க்கும், ரூ.100-க்கு விற்ற பச்சை மிளகாய் ரூ.50 முதல் ரூ.60-க்கும், ரூ.60-க்கு விற்ற கொத்தமல்லி கட்டு ரூ.30-க்கும் விற்பனை ஆனது.

இதேபோல் 50-க்கு விற்ற முள்ளங்கி ரூ.15 முதல் ரூ.20-க்கும், ரூ.50-க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.20-க்கும், ரூ.50-க்கு விற்ற பீட்ரூட் ரூ.20 முதல் ரூ.40-க்கும், ரூ.120-க்கு விற்ற பீன்ஸ் ரூ.80-க்கும் நேற்று விற்பனை ஆனது. முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலையும் உயரவில்லை. கடந்த வாரத்தை போல அவை கிலோ ரூ.20-க்கு விற்பனை ஆனது.

மொச்சையை பொறுத்தவரை அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் தான் சீசன் இருக்கும். ஆனால் தேனி மாவட்டத்தில் தற்போது மொச்சை சாகுபடி நடப்பதால் திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டுக்கு மொச்சை வரத்தாகி உள்ளது.

மார்க்கெட்டில் ஒரு கிலோ மொச்சை ரூ.50-க்கு விற்பனை ஆகிறது. தினமும் ஒரு டன் வரை மொச்சை மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

காரணம் என்ன?

காய்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்தது குறித்து வியாபாரிகளிடம் கேட்ட போது, கோவில் திருவிழா, விஷேச நாட்களில் மார்க்கெட்டில் காய்கறிகளின் விற்பனை இருமடங்காக இருக்கும். தற்போது ஆடி மாதம் தொடங்கியுள்ளதால் சில கோவில்களில் கிடா வெட்டி அசைவ உணவு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதனால் ஆடி மாதத்தில் மார்க்கெட்டில் காய்கறிகள் விற்பனை குறைந்து விடுகிறது. வாடிக்கையாக வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் காய்கறிகளின் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆடி மாதம் முடிந்த பிறகு விலை மீண்டும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கிறோம் என்றனர்.


Next Story