உழவர் சந்தையில் மாலை நேரத்திலும் காய்கறி விற்பனை


உழவர் சந்தையில் மாலை நேரத்திலும் காய்கறி விற்பனை
x

பாளையங்கோட்டை உழவர் சந்தையில் மாலை நேரத்திலும் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை மகாராஜா நகர், டவுன் கண்டியப்பேரி, என்.ஜி.ஓ காலனி, மேலப்பாளையம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு அந்தந்த பகுதியில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைவிக்கும் காய்கறிகளை கொண்டு வந்து பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்கிறார்கள். இதற்கான விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்கிறார்கள்.

இங்கு காலை 6 மணி முதல் மதியம் வரை காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பாளையங்கோட்டை மகாராஜா நகர் உழவர் சந்தையில் மாலை நேரத்தில் தானியங்கள், முட்டை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மாலை நேரத்தில் காய்கறிகள் எதுவும் விற்பனை செய்யப்படாது.

இந்தநிலையில் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை உத்தரவுப்படி பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தையில் மாலை நேரத்திலும் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி நேற்று மாலை முதல் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் காலை நேரத்தில் உழவர் சந்தைக்கு சென்று காய்கறிகள் வாங்க முடியாதவர்கள், மாலை நேரத்தில் சென்று வாங்க எளிதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story