தலையூத்து அருவியில் மூழ்கி காய்கறி வியாபாரி பலி


தலையூத்து அருவியில் மூழ்கி காய்கறி வியாபாரி பலி
x

விருப்பாட்சி அருகே, தலையூத்து அருவியில் மூழ்கி காய்கறி வியாபாரி பலியானார்.

திண்டுக்கல்

காய்கறி வியாபாரி

மதுரை கே.புதூரை சேர்ந்தவர் அருண்பிரகாஷ் (வயது 32). இவர், அதே பகுதியில் காய்கறி கமிஷன் கடை நடத்தி வருகிறார். நேற்று இவர், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனது உறவினர் அஸ்தி கரைப்பு நிகழ்ச்சிக்காக விருப்பாட்சி அருகே உள்ள தலையூத்து அருவிக்கு வந்தார்.

அஸ்தியை கரைத்துவிட்டு உறவினர்களுடன் சேர்ந்து, அருவியில் அருண்பிரகாஷ் குளித்தார். அப்போது, அருவி தண்ணீர் விழும் இடத்தில் உள்ள பெரிய பள்ளத்தில் நீரில் திடீரென அவர் மூழ்கினார். இதனைக்கண்ட அவருடைய உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அருவியில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால், அருண்பிரகாசை காப்பாற்ற முடியவில்லை.

உடல் மீட்பு

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலையத்துக்கு உறவினர்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து அருண்பிரகாசை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி அருவி நீரில் மூழ்கிய அருண்பிரகாசின் உடலை மீட்டனர்.

தண்ணீரில் மூழ்கிய அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுபற்றி தகவலறிந்த சத்திரப்பட்டி போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து அருண்பிரகாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினரின் அஸ்தி கரைக்க வந்தபோது, அருவியில் மூழ்கி காய்கறி வியாபாரி பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.


Next Story