ஓணம், சுபமுகூர்த்த தினம் எதிரொலி: ஈரோடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு
ஓணம், சுபமுகூர்த்த தினம் எதிரொலியாக ஈரோடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
ஈரோடு
ஓணம், சுபமுகூர்த்த தினம் எதிரொலியாக ஈரோடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
விலை உயர்வு
ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு தாளவாடி, ஒட்டன்சத்திரம், பழனி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு காய்கறிகளின் வரத்து குறைந்தது.
இதேபோல் ஓணம் பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளதால், கேரளா மாநிலத்துக்கு காய்கறிகளின் தேவையும் அதிகரித்து உள்ளது. அங்கும் அதிகமான காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுவதால், ஈரோடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்துவிட்டது. மேலும், இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் தொடர்ந்து சுபமுகூர்த்த நாட்கள் வருவதால் காய்கறிகளின் தேவை அதிகமாகி உள்ளது. எனவே காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து விட்டது.
தக்காளி
அனைத்து காய்கறிகளின் விலையும் ரூ.10 முதல் ரூ.40 வரை ஒரு கிலோவுக்கு விலை உயர்ந்து உள்ளது. கடந்த வாரம் ரூ.60-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கத்திரிக்காய் நேற்று ரூ.80-க்கு விற்பனையானது. இதேபோல் வெண்டைக்காயும் கிலோ ரூ.20 உயர்ந்தது. முருங்கைக்காய் விலையும் அதிரடியாக உயர்ந்தது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.40 விற்கப்பட்ட முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனையானது.
தக்காளியின் விலையும் கடந்த ஒரு வாரமாக ஏறுமுகமாகவே உள்ளது. 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பெட்டிகளில் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது ஆயிரம் பெட்டிகள் மட்டுமே வரத்தானது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ரூ.15-க்கு விற்பனையான ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.60-க்கு விற்பனையானது. மார்க்கெட்டில் நேற்று விற்பனையான காய்கறிகளின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-
புடலங்காய் - ரூ.40, பீர்க்கங்காய் - ரூ.60, பாகற்காய்- ரூ.50, முள்ளங்கி - ரூ.50, இஞ்சி - ரூ.90, பீட்ரூட் - ரூ.60, பீன்ஸ் - ரூ.80, கேரட் - ரூ.100, மிளகாய் - ரூ.50, முட்டைக்கோஸ் - ரூ.25, உருளைக்கிழங்கு - ரூ.50, சின்ன வெங்காயம் - ரூ.40, பெரிய வெங்காயம் - ரூ.30.