வெளிசந்தையை விட காய்கறி அதிக விலைக்கு விற்பனை


வெளிசந்தையை விட காய்கறி அதிக விலைக்கு விற்பனை
x
தினத்தந்தி 17 July 2023 12:15 AM IST (Updated: 17 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் உழவர் சந்தையில் வெளி சந்தையை விட காய்கறி விலை அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்

கடலூர்

கடலூர்

உழவர் சந்தை

கடலூர் அண்ணா பாலம் அருகில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது. கடைகளும் உடைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து கூடுதலாக கடைகளும், மழைக்காலங்களில் சிரமமின்றி வியாபாரம் செய்ய தரை தளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் ரூ.47 லட்சத்தில் அமைக்கப்பட்டது.

110-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் கூடிய உழவர் சந்தை கடந்த 12.1.2023 அன்று திறக்கப்பட்டது. இந்த உழவர் சந்தைக்கு கடலூர் மாநகராட்சியை சுற்றியுள்ள ஞானமேடு, கண்டக்காடு, ராமாபுரம், கீரப்பாளையம், ஒதியடிக்குப்பம், வழிசோதனைப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறியை இடைத்தரகர்கள் இன்றி கொண்டு வந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

கூடுதல் விலைக்கு விற்பனை

இதன் மூலம் விவசாயிகள் எவ்வித பிரச்சினையும் இன்றி வியாபாரம் செய்து வருகின்றனர். முன்பு காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்பட்டு வந்த உழவர் சந்தை தற்போது இரவு 8 மணி வரை செயல்படுகிறது. இதனால் பொதுமக்களும் வெளிசந்தையை விட குறைந்த விலைக்கு காய்கறி கிடைக்கும் என்பதால், உழவர் சந்தையை நாடி வந்து, தங்களுக்கு தேவையான காய்கறியை வாங்கிச்சென்றனர்.

சிலர் அதிகாலையிலேயே வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்களை வாங்கி சென்று வருகின்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக உழவர் சந்தையில் வெளி சந்தையை விட கூடுதல் விலைக்கு காய்கறி விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். வெளி சந்தையை விட கூடுதலாக ரூ.5, ரூ.10 என அதிகமாக விலை வைத்து காய்கறியை விற்பனை செய்து வருகிறார்கள். மேலும் உழவர் சந்தையில் உள்ள அறிவிப்பு பலகையில் எழுதி வைக்கப்பட்டு உள்ள விலை பட்டியலை விடவும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.

விலை பட்டியலை விட அதிகம்

இது பற்றி உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் சிலர் கூறுகையில், வெளி சந்தையை விட உழவர் சந்தையில் ஒரு சில காய்கறியின் விலை சற்று அதிகமாக தான் விற்பனை செய்யப்படுகிறது. விலைப்பட்டியலில் எழுதப்பட்ட விலைக்கும், அவர்கள் விற்கும் விலைக்கும் சம்பந்தம் இல்லை. இன்று (நேற்று) விலைபட்டியலில் ஒரு கிலோ ஞானமேடு கத்தரிக்காய் ரூ.55 என எழுதி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் விவசாயிகளிடம் ½ கிலோ கத்தரிக்காய் கேட்டால் ரூ.30, ரூ.35 என்று வியாபாரம் செய்கிறார்கள்.

வெண்டைக்காய் கிலோ ரூ.30-ரூ.35 என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகள் ரூ.40-க்கு விற்பனை செய்கிறார்கள். புடலங்காய் கிலோ ரூ.25-க்கு பதிலாக ரூ.30-க்கு விற்பனை செய்கிறார்கள். இதேபோல் பல்வேறு காய்கறிகளின் விலையை உயர்த்தி விற்பனை செய்து வருகிறார்கள். இதை உழவர் சந்தை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இது பற்றி யாரிடம் புகார் தெரிவிப்பது என்று தெரியவில்லை. ஆகவே இதை மாவட்ட கலெக்டர், வேளாண்மை உயர் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story