நெல்லை உழவர் சந்தைகளில் ரூ.62 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை


நெல்லை உழவர் சந்தைகளில் ரூ.62 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை
x

பொங்கல் பண்டிகையையொட்டி நெல்லை உழவர் சந்தைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.62 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனையானது.

திருநெல்வேலி

பொங்கல் பண்டிகையையொட்டி நெல்லை உழவர் சந்தைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.62 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனையானது.

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் வாங்கி வருகிறார்கள்.

நெல்லை பாளையங்கோட்டை மகாராஜநகர், என்.ஜி.ஓ. காலனி ஆகிய இடங்களில் உள்ள உழவர் சந்தைகளில் கடந்த 2 நாட்களாகவே காய்கறிகள் விற்பனை அதிகளவில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மட்டும் அந்த உழவர் சந்தைகளில் 85 டன் காய்கறிகள் விற்பனையானது. அதன் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும்.

ரூ.62 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை

நேற்றும் அதிகாலை முதலே உழவர் சந்தைகளில் விவசாயிகளிடம் பொதுமக்கள் நேரடியாக காய்கறிகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். மகாராஜநகர் உழவர் சந்தையில் 84 டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்தது. சுமார் 120 விவசாயிகள் கொண்டு வந்த இந்த காய்கறிகளை பொதுமக்கள் சுமார் 13 ஆயிரம் பேர் வாங்கி சென்றனர். நேற்று மட்டும் அங்கு ரூ.42 லட்சத்துக்கு விற்பனை நடந்தது.

இதேபோல் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள உழவர் சந்தையில் நேற்று ஒரு நாளில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 30 டன் காய்கறிகள் விற்று தீர்ந்தன. அங்கு மட்டும் 10 ஆயிரம் பேர் வந்து காய்கறிகள் வாங்கி சென்றனர். ஆக மொத்தம் உழவர் சந்தைகளில் மட்டும் நேற்று ஒரே நாளில் ரூ.62 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனையானது என்று உழவர் சந்தை மேலாண்மை அலுவலர் பாப்பாத்தி, உதவி மேலாண்மை அலுவலர் உத்தமன் ஆகியோர் தெரிவித்தனர்.

விலை விவரம்

மகாராஜநகர் உழவர் சந்தையில் நேற்று காய்கறிகள் மற்றும் பழங்கள் (ஒரு கிலோவுக்கு) விலை விவரம் வருமாறு:-

தக்காளி-ரூ.35, வெள்ளை கத்தரி-ரூ.100, கீரிபச்சை கத்தரி-ரூ.60, கீரிவைலட் கத்தரி-ரூ.35, வெண்டை-ரூ.70, புடலை-ரூ.25, சுரைக்காய்-ரூ.12, பீர்க்கங்காய்-ரூ.25, பூசணி-ரூ.14, டிஸ்கோ பூசணி-ரூ.22, தடியங்காய்-ரூ.15, அவரை நாடு-ரூ.60, கொத்தவரை-ரூ.30, பாகற்காய் சிறியது நாடு-ரூ.40, ஸ்டார் பாகற்காய்-ரூ.35, பெரியது-ரூ.25, பச்சைமிளகாய்-ரூ.44, முருங்கைக்காய் பரோடா-ரூ.140, பாளையங்கோட்டை-ரூ.160, பெரிய வெங்காயம் புதியது-ரூ.28, பழையது-ரூ.26, சின்னவெங்காயம்-ரூ.60 முதல் ரூ.80 வரை, தேங்காய்-ரூ.34, வாழைக்காய்-35, வாழைஇலை (5) -ரூ.15 முதல் ரூ.20 வரை, கறிவேப்பிலை-ரூ.35, புதினா-ரூ.45, மல்லி இலை-ரூ.40, இஞ்சி-ரூ.50, மாங்காய் நாடு-ரூ.60, பெங்களூரா-ரூ.70, ரிங்பீன்ஸ்-ரூ.68, முள்ளங்கி-ரூ.20, உருளைக்கிழங்கு-ரூ.25, கேரட்-ரூ.50, சிறிய கேரட்-ரூ.25, முட்டைக்கோஸ்-ரூ.12, பீட்ரூட் கம்பம்-ரூ.30, உடுமலை-ரூ.28, ஊட்டி-ரூ.36, காலிபிளவர்-ரூ.38, கருணைக்கிழங்கு-ரூ.22, சேனைக்கிழங்கு-ரூ.35, பட்டர்பீன்ஸ்-ரூ.140, மினி பட்டர்-ரூ.80, சோயாபீன்ஸ்-ரூ.90,

வாழைப்பழம் செவ்வாழை-ரூ.75, ஏலக்கி-ரூ.70, மட்டி-ரூ.60, நேந்திரன்-ரூ.60, கற்பூரவள்ளி-ரூ.50, கோழிகூடு-ரூ.50, நாடு-ரூ.60, பச்சை-ரூ.40 முதல் ரூ.45 வரை, எலுமிச்சை-ரூ.25, ஆப்பிள்-ரூ.100, ராயல் ஆப்பிள்-ரூ.160, சாத்துக்குடி-ரூ.60 முதல் ரூ.70 வரை, மாதுளை-ரூ.140 முதல் ரூ.160 வரை, கொய்யா-ரூ.50 முதல் ரூ.60 வரை, சப்போட்டா-ரூ.40, பப்பாளி-ரூ.30, திராட்சை-ரூ.80, இலந்தை பழம்-ரூ.80, ஆரஞ்சு-ரூ.80, மால்டா ஆரஞ்சு-ரூ.100.


Next Story