தாறுமாறாக செல்லும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி


தாறுமாறாக செல்லும் வாகனங்களால்   போக்குவரத்து நெருக்கடி
x

தாறுமாறாக செல்லும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி

திருப்பூர்

அவினாசி

அவினாசியில் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த தானியங்கி சிக்னலை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

அவினாசிலிங்கேசுவரர் கோவில்

திருப்பூர் மாவட்டம் அவினாசி நகரம் சேலம்- கொச்சின் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மெயின்ரோட்டில் வரலாற்று சிறப்புமிக்க அவினாசிலிங்கேசுவரர் கோவில் அதையொட்டி நான்கு ரத வீதிகளில் 10 திருமண மண்டபங்கள், போலீஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், தபால் அலுவலகம் ஜவுளி, நகை கடைகள், அரசு ஆரம்ப பள்ளி, மேல்நிலைப்பள்ளி, ஓட்டல்கள், பூக்கடைகள், பழக்கடைகள், ஸ்டேஷனரி உள்ளிட்ட ஏராளமான வணிக நிறுவனங்கள் அடுத்தடுத்து உள்ளன.

அவினாசி நகரில் இருந்து ஈரோடு சேலம், சென்னை, பெங்களூரு, கோவை மேட்டுப்பாளையம், கூடலூர், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, சத்தியமங்கலம், புளியம்பட்டி, கோபி, மைசூரு உள்ளிட்ட பல நகரங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் தினசரி டிராவல்ஸ், லாரி, கார், தனியார் மற்றும் அரசு பேருந்து உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் வாகனங்களில் சென்று வருகிறார்கள். மேலும் அவினாசிக்கு மிக அருகில் பனியன் நகரமான திருப்பூர் மற்றும் நியூ திருப்பூர் உள்ளது.

போக்குவரத்து நெரிசல்

இங்குள்ள பனியன் கம்பெனி மற்றும் பனியன் சார்ந்த தொழில்கூடங்களுக்கு தனியார் கம்பெனி பஸ்கள், வேன்கள், இரு சக்கர வாகனங்கள் என அனைத்தும் அவினாசி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள நால்ரோடு வழியாகத்தான் கடந்து செல்ல வேண்டும். மூகூர்த்த நாட்கள், திருவிழா காலங்களில் வழக்கத்தை விட கூடுதல் நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் தாறுமாறாக செல்கிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதேபோல் ஆட்டையாம்பாளையம் நால்ரோடு சந்திப்பில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

கோவை, மேட்டுப்பாளையம் ஆகிய ஊர்களிலிருந்து அவினாசி நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் அசுரவேகத்தில் வருவதால் ரோட்டில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், நடந்து செல்பவர்களுக்கும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலை உள்ளது. அவினாசி பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள நால்ரோடு சந்திப்பு, ஆட்டையாம்பாளையம் நால்ரோடு சந்திப்பு ஆகிய இடங்களில் தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டு அது செயல்பட்டு வந்தது.

தானியங்கி சிக்னல்

ஆனால் அவைகள் 2-ம் பழுதடைந்து பல வருடங்களாக கவனிப்பாரற்று கிடக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகளும் தாறுமாறாக செல்கிறார்கள் இதனால் விபத்துகள் நேரிடுகிறது.

எனவே போக்குவரத்தை சீர்படுத்த 2 இடங்களிலும் உள்ள தானியங்கி சிக்னலை பழுதுநீக்கி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story