ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க 3 மாநில எல்லைகளில் போலீசார் தீவிர வாகன சோதனை
கிருஷ்ணகிரி
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க 3 மாநில எல்லைகளில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வாகன சோதனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சேலம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணவேணி, திபாகர் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவர்கள் 2 குழுக்களாக பிரிந்து மாநில எல்லைகளான கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாக செல்லும் லாரி, சரக்கு வேன் உள்ளிட்டவைகளை போலீசார் நிறுத்தி டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கான ஆவணங்களை சரிபார்த்தனர்.
கடும் நடவடிக்கை
இது குறித்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறுகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக ஆந்திரா, கர்நாடகாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என்று தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.