நின்றிருந்த லாரியில் ரூ.17 லட்சம் வாகன உதிரிபாகங்கள் திருட்டு


நின்றிருந்த லாரியில் ரூ.17 லட்சம் வாகன உதிரிபாகங்கள் திருட்டு
x
தினத்தந்தி 9 July 2023 12:34 AM IST (Updated: 9 July 2023 5:56 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே நின்றிருந்த லாரியில் ரூ.17 லட்சம் வாகன உதிரிபாகங்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி

திருச்சி அருகே நின்றிருந்த லாரியில் ரூ.17 லட்சம் வாகன உதிரிபாகங்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

டிரைவர்

தென்காசியைச் சேர்ந்த லாரி டிரைவர் சிவராஜா (வயது 37). இவர் சென்னையில் உள்ள லாரி கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த மாதம் 23-ந்தேதி சிவராஜா சென்னையில் இருந்து மதுரைக்கு மினிலாரியில் இருசக்கர வாகன உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே இரவு லாரியை நிறுத்திவிட்டு அதன் அருகிலேயே படுத்து தூங்கி உள்ளார்.

வாகன உதிரிபாகங்கள் திருட்டு

பின்னர், மறுநாள் காலையில் லாரியை ஓட்டிக்கொண்டு திருச்சிக்கு வந்துள்ளார். திருச்சியில் ஓரிடத்தில் லாரியை நிறுத்தி பார்த்தபோது, அட்டைப்பெட்டியில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகன உதிரி பாகங்கள் திருடப்பட்டு இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சிவராஜா இதுகுறித்து சென்னையில் உள்ள லாரி கம்பெனி உரிமையாளர் ரகோத்தமனின் மகன் குமரகுருவிடம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, குமரகுரு சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும் உதிரிபாகங்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.

3 பேர் கைது

இந்த நிலையில் சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வாகன உதிரி பாகங்களை திருடியதாக திருவள்ளூர் மாவட்டம், கொளத்தூர் பூம்புகார் நகரை சேர்ந்த முத்து (45), கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் (19), கல்வராயன்மலையைச் சேர்ந்த ஸ்ரீதர் (வயது 19) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் 39 அட்டைப் பெட்டிகளில் இருந்த ரூ.17 லட்சம் மதிப்புள்ள உதிரி பாகங்களை பறிமுதல் செய்தனர். கைதான 3 பேரும் துறையூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு லால்குடி சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story