நல்லம்பள்ளி அருகே தொப்பூர் கணவாயில் 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து-10 பேர் காயம்; 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


நல்லம்பள்ளி அருகே தொப்பூர் கணவாயில் 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து-10 பேர் காயம்; 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே தொப்பூர் கணவாயில் 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்த நிலையில், 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொப்பூர் கணவாய்

உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து கண்ணாடி லோடுகளை ஏற்றி கொண்டு கேரளா நோக்கி லாரி ஒன்று சென்றது. இந்த லாரியை சேலத்தை சேர்ந்த முரளி (வயது 36) என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் மாற்று டிரைவராக சேலத்தை சேர்ந்த பழனிசாமி (55) உடன் சென்றார்.

இந்த லாரி தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள தொப்பூர் கணவாய் சோதனைச்சாவடி பகுதியில் நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது.

அடுத்தடுத்து மோதல்

மேலும் முன்னால் சென்ற 3 சரக்கு வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி மீதும் மோதி, கவிழ்ந்தது. இந்த விபத்தில் கன்டெய்னர் லாரியும் கவிழ்ந்த நிலையில், 3 சரக்கு வாகனங்கள் சாலையோர தடுப்புகள் மீது ஏறி நின்றன.

விபத்தில் சிக்கி கண்ணாடி பார லாரி டிரைவர்கள் முரளி, பழனிசாமி மற்றும் சரக்கு வாகனங்களில் வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராம்சுரோ (42), சங்கர் (16), மோனா (18) உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். மேலும் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

வாகனங்கள் மீட்பு

இதுகுறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்தில் சிக்கி தவித்த டிரைவர்கள் உள்பட 10 பேரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி மற்றும் சேலம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து சாலையில் கவிழ்ந்த வாகனங்கள் மற்றும் விபத்தில் சிக்கிய 3 சரக்கு வாகனங்களை மீட்பு குழுவினர் கிரேன் உதவியுடன் மீட்டு, அப்புறப்படுத்தினர். பின்னர் சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு, தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீரானது. இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story