ஏலத்துக்காக பருத்தி மூட்டைகளுடன் சாலையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வாசலில் ஏலத்துக்காக பருத்தி மூட்டைகளுடன் சாலையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வாசலில் ஏலத்துக்காக பருத்தி மூட்டைகளுடன் சாலையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பருத்தி சாகுபடி
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 7ஆயிரத்து 500 எக்டேர் நிலப்பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பருத்தி அமோக விளைச்சலால் அறுவடைப் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அறுவடை செய்யப்படும் பருத்தியை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் செம்பனார்கோவிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த 3-ந் தேதி (திங்கட்கிழமை) பருத்தி மறைமுக ஏலம் நடந்தது.
இவ்வாறு ஏலம் எடுக்கப்படும் பருத்தியை வியாபாரிகள் தங்கள் இடத்துக்கு 5 நாட்களுக்குள் கொண்டு செல்வர். அதன்பின்னர், ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் விவசாயிகள் தங்கள் பருத்தியை கொண்டு வந்து விற்பனைக்காக அடுக்குவார்கள். இந்த நடைமுறையே வழக்கமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த திங்கட்கிழமை நடந்த ஏலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட பருத்தியை வியாபாரிகள் முழுவதுமாக எடுத்துச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இன்று திங்கட்கிழமை நடக்க உள்ள ஏலத்திற்காக பருத்தியை விவசாயிகள் கடந்த 3 நாட்களாக எடுத்து வந்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முன்பு வாகனங்களில் வைத்து காத்துக் கிடக்கின்றனர்.
சுற்றுச்சுவர் இல்லை
மேலும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தால் பின்வாசல் வழியாகவும் விவசாயிகள் பருத்தியை உள்ளே கொண்டு வந்து அடுக்கி வைக்கின்றனர். இதனால் ஏற்கெனவே கொள்முதல் செய்த பருத்தியை வெளியில் கொண்டு செல்வதில் வியாபாரிகளுக்கு சிரமமும், காலதாமதமும் ஏற்பட்டுள்ளது.
ஒழுங்குமுறை விற்பனைக்கூட வாசலில் விவசாயிகள் 3 நாட்களாக பல கிலோமீட்டர் தொலைவுக்கு காத்திருக்கும் நிலையில், பின்வாசல் வழியாக சில விவசாயிகள் உள்ளே நுழைவதால் ஏற்கெனவே காத்திருக்கும் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை
மேலும், ஏலத்தில் எடுக்கப்பட்ட பருத்தியை வியாபாரிகள் எடுத்து செல்லும் வரை ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகின்றனர். எனவே பருத்தி மூட்டைகளை பாதுகாக்க ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என வியாபாரிகள், விவசாயிகள், ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூன்று குடோன்களிலும் பருத்தி மூட்டைகள் நிரம்பி வழிவதால் வெளியில் அடுக்கிய மற்றும் வாகனங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட பருத்தி மூட்டைகள் திடிரென மழை பெய்தால், பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.