தொடர் மண்சரிவு: கொடைக்கானல் மலைப்பாதையில் வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டும் - நெடுஞ்சாலைத்துறை அறிவுரை
கொடைக்கானல் மலைப்பாதையில் வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளனர்.
பழனி:
பழனி-கொடைக்கானல் மலைப்பாதை வழியே தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சவரிக்காடு அருகே 13-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. அதையடுத்து சாலையோரம் மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைக்கப்பட்டது. கொடைக்கானல் பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் கடந்த 20-ந்தேதி சவரிக்காடு பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது பணிகள் முடிவடைந்ததை அடுத்து வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே நீரோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆகவே மலைப்பாதையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். எனினும் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் மித வேகத்தில் செல்ல வேண்டும். சாலையோரம் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.