உரிமம் இல்லாமல் இயங்கும் கழிவுநீர் வாகனங்கள் பறிமுதல்
உரிமம் இல்லாமல் இயங்கும் கழிவுநீர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
பட்டுக்கோட்டை;
பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத்தை வழங்குவதற்காக கழிவு நீரை வாகனங்கள் மூலம் சுத்தம் செய்தல் பணிகளை ஒழுங்குபடுத்த விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி கழிவுநீர் அகற்றும் லாரிகள் மற்றும் டிரெய்லர்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த கடந்த 2022-ம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை நகர எல்லைக்குள் உள்ள கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் நகராட்சி அலுவலகத்தில் சட்ட விதிகளின்படி உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே உரிமம் பெற்று உரிமக்காலம் முடிந்தவர்கள் உடனே புதுப்பிக்க வேண்டும். நகராட்சி மூலம் 2 ஆண்டுகள் செல்லத்தக்க உரிமம் பெற விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் உரிமம் வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டும். கழிவுநீர் வாகனங்களை உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் நகராட்சி வழிகாட்டுதலின்படி பாதுகாப்பாக இயக்க வேண்டும். உரிமம் இல்லாமல் இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நகராட்சியால் பறிமுதல் செய்யப்படும். மேலும் நீதிமன்றம் மூலம் வழக்குப்பதிவு செய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.