வேலம்மாள் பாட்டிக்கு இலவச வீடு வழங்கப்பட்டது
தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்த வேலம்மாள் பாட்டிக்கு இலவச வீடு வழங்கப்பட்டது. அவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.
நாகர்கோவில்,
தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்த வேலம்மாள் பாட்டிக்கு இலவச வீடு வழங்கப்பட்டது. அவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.
முதல்-அமைச்சரிடம் கோரிக்கை
தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும், அறிவித்தபடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் இரு தவணைகளிலும், நிவாரணப் பொருட்களும் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் வழங்கப்பட்டபோது நாகர்கோவிலைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி நிவாரண நிதியையும், நிவாரணப் பொருட்களையும் பெற்ற சந்தோஷத்தில் பொக்கை வாய் காட்டி சிரித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இதை பார்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்தார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் நாகர்கோவிலுக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த வேலம்மாள் பாட்டி தனக்கு வீடு இல்லை என்று கூறினார். உடனே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.
வீடு ஒதுக்கீடு
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலம்மாள் பாட்டியின் ஒரு வீடியோ வெளியானது. அதில் 'முதல்-அமைச்சர் ஐயா எனக்கு வீடு தருவேன் என்று சொன்னீர்கள். இதுவரை வீடு கிடைக்கவில்லை. நான் தெருவில் நிற்கிறேன் ஐயா' என்று கூறியிருந்தார். இந்த வீடியோ வைரலானதால், கலெக்டர் உத்தரவின்பேரில் நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் நேரில் சந்தித்து விசாரணை நடத்தி, அவருக்கு வீடு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு சொந்தமான குடியிருப்பில் வேலம்மாள் பாட்டிக்கு ரூ.7 லட்சத்து 56 ஆயிரம் மதிப்புடைய வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயனாளியின் பங்களிப்புத் தொகையாக வேலம்மாள் பாட்டி செலுத்த வேண்டிய தொகை ரூ.76 ஆயிரத்தை, அவர் சார்பில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைரணி துணை அமைப்பாளர் பூதலிங்கம் செலுத்தினார். இதையடுத்து வேலம்மாள் பாட்டிக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணையை கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் வழங்கினார்.
நன்றி
வேலம்மாள் பாட்டியை நேற்று காலை நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மகேஷ் சந்தித்து, பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். அப்போது வேலம்மாள் பாட்டி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொக்கை வாய் சிரிப்புடன் நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கேட்சன், ஒன்றிய செயலாளர் பிராங்கிளின் ஆகியோர் கலந்து கொண்டனர்.