கோவில்களில் மகாளய அமாவாசையொட்டி சிறப்பு வழிபாடு
வெள்ளகோவில், முத்தூர் பகுதி கோவில்களில் மகாளய அமாவாசையை யொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
மகாளய அமாவாசை
வெள்ளகோவிலில் நேற்று மகாளய அமாவாசையையொட்டி வீரக்குமாரசாமி கோவிலில் சாமிக்கு தங்க கவசம், செல்லாண்டியம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சோழீஸ்வரர், கண்ணபுரம் மாரியம்மன், விக்ரமசோழீஸ்வரர், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி, மாந்தபுரம் மாந்தீஸ்வரர், உத்தமபாளையம் காசிவிசுவநாதர், எல்.கே.சி புற்றுக்கண்ஆனந்த விநாயகர் கோவில்களில் சாமிக்கு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. வெள்ளகோவில் தர்மசாஸ்தா அய்யப்ப சாமி கோவிலில் காலை கணபதி ஹோமம், அஷ்டாபிசேகம், கலசாபிஷேகம், ஐயப்பசாமிக்கு தங்க காப்பு அலங்காரத்தில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன, அமாவாசையையொட்டி தன்வந்திரிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
நந்தவன கருப்பசாமி
முத்தூர் மோளாங்குட்டப்பாளையம் நந்தவன கருப்பணசாமி கோவிலில் புரட்டாசி மாத அமாவாசை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு கன்னிமார், நந்தவன கருப்பணசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய பட்டாடை உடுத்தப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது.விழாவில் கோவில் குல மக்கள், பக்தர்கள், சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.