வேலூர் விமான நிலைய பணிகள் மீண்டும் தொடக்கம்


வேலூர் விமான நிலைய பணிகள் மீண்டும் தொடக்கம்
x

பல மாதங்களாக முடங்கி கிடந்த வேலூர் விமான நிலைய பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

வேலூர்

விமான நிலையம்

வேலூர் அப்துல்லாபுரத்தில் விமான நிலையம் அமைந்துள்ளது. மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் இந்த விமான நிலையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு அதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியது. பல ஆண்டுகளாக பல்வேறு கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. ஓடுதளம், டெர்மினல் கட்டிடம், தளவாட கருவிகள், பயணிகள் காத்திருக்கும் அறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டது.

இதன் நடுவே இருந்த தார்வழி சாலையும் விமான நிலைய விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்டது. பல கோடி ரூபாய் செலவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர எடுக்கப்பட்ட முயற்சியில் திடீரென தொய்வு ஏற்பட்டது. விமான நிலையத்தின் செயல்பாட்டுக்கு கூடுதலாக சுமார் 10 ஏக்கர் நிலம் தேவையாக இருந்தது. ஆனால் அதை கையகப்படுத்துவதில் பல சிக்கல்கள் எழுந்தது.

இதனால் பல மாதங்களுக்கு மேல் பணிகள் ஏதும் நடைபெறாமல் இருந்தது. அங்குள்ள ஓடுதள பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செடி, கொடிகள் முளைத்தன. அமைக்கப்பட்ட டெர்மினல் கட்டிடமும் பராமரிப்பின்றி காணப்பட்டது.

பணிகள் தொடக்கம்

இந்த நிலையில் தற்போது வேலூர் விமான நிலையத்தில் மீண்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அங்குள்ள பனைமரங்கள் உள்ளிட்ட மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் மின்கம்பங்களும் அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வேலூர் விமான நிலைய பணிகள் தொடங்க கூடுதலாக 10 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. இந்த நிலையில் அந்த நிலம் தேவையில்லை என்றும், இருக்கும் இடத்தினை வைத்துக் கொண்டு விமான நிலையத்தை பயன்படுத்தலாம் என்றும் விமான ஆணையரகம் சார்பில் தெரிவித்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

எனவே இருக்கும் இடத்தில் உள்ள மரங்கள், மின்கம்பங்கள் அகற்றல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சுமார் ரூ.22 லட்சம் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்றனர்.


Next Story