தமிழக எல்லையில் வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆய்வு
பேரணாம்பட்டு அருகே தமிழக எல்லையில், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வுசெய்தார்.
டி.ஐ.ஜி. ஆய்வு
வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி நேற்று பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு பதிவேடுகள் குறித்து கேட்டறிந்து வளாகத்தை பார்வையிட்டு, பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். தற்போது கோடை காலமாக இருப்பதால் போலீஸ் நிலைய வளாகத்தில் பறவைகளுக்கு தாகம் தீர்ப்பதற்கு பாத்திரங்களில் தண்ணீர் வைக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து அவர் பேரணாம்பட்டு அருகே உள்ள தமிழக எல்லையான பத்தலப்பல்லி கிராமத்தில் இயங்கி வரும் போலீஸ் சோதனைச்சாவடிக்கு சென்று பதிவேடுகளை ஆய்வு செய்து, வாகன தணிக்கை பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் சோதனைச்சாவடியில் அமைக்கப்பட்டுள்ள 6 கண்காணிப்பு கேமராக்கள் இயங்குகிறதா என ஆய்வு செய்து, அந்தப்பகுதியில் வன விலங்குகள் நுழையாதவாறு பாதுகாப்பாக முள்கம்பி வேலி அமைக்கவும், பறவைகளின் தாகம் தீர்ப்பதற்கு பாத்திரங்களில் தண்ணீர் வைக்கவும் போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.
தமிழக எல்லையில்...
பின்னர் சுமார் 4 கி.மீ. தூரத்திலுள்ள தமிழக எல்லையான பத்தலப் பல்லி மலைப்பாதைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக எருக்கம்பட்டு கிராமம் சார்பில் சாராயம் ஒழிக்கப்பட்டுள்ளதாக அமைக்கப்பட்டுள்ள தகவல் பலகையை பார்வையிட்டார். வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ் ராஜேஷ் கண்ணன், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தேவபிரசாத் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.