வேலூர் மாவட்ட வீரர்கள் ஒட்டுமொத்த சாம்பியன்
பளு தூக்கும் போட்டியில் வேலூர் மாவட்ட வீரர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பெற்றனர்.
மாநில அளவிலான மிகஇளையோர், இளையோர், சீனியர் பெண்கள் மற்றும் ஆண்கள் பளுதூக்கும் போட்டிகள் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை நடைபெற்றன. பளுதூக்கும் போட்டிகளில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் 24 தங்கம், 13 வெள்ளி, 9 வெண்கல பதக்கம் வென்றனர். மேலும் அதிக புள்ளிகள் பெற்று பெண்கள் மிக இளையோர், இளையோர், சீனியர் பிரிவிலும், ஆண்கள் மிகஇளையோர், இளையோர் பிரிவிலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர்.
அவர்கள் தாங்கள் பெற்ற பதக்கம் மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பை ஆகியவற்றை நேற்று கலெக்டர் குமாரவேல்பாண்டியனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். பளுதூக்கும் வீரர்கள் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வேலூர் மாவட்டத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார். அப்போது வேலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான், பயிற்சியாளர்கள் விநாயகமூர்த்தி, கவிதா, வேலூர் மாவட்ட பளுதூக்கும் சங்க மாவட்ட தலைவர் திருமுருகன், செயலாளர் சிவலிங்கம் மற்றும் பலர் உடனிருந்தனர்.