வேலூர் மாவட்டத்தை முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும்
10, 12-ம் வகுப்பு தேர்ச்சியில் வேலூர் மாவட்டத்தை முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
10, 12-ம் வகுப்பு தேர்ச்சியில் வேலூர் மாவட்டத்தை முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
கருத்தரங்கு
வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் பொது சுகாதாரத்துறை மற்றும் பள்ளிகல்வித்துறை இணைந்து பள்ளிகளில் புகையிலை மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று நடந்தது.
மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட புகையிலை தடுப்பு அலுவலர் ஜெயஸ்ரீ மற்றும் அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.
இதில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கலந்து கொண்டு பேசியதாவது:-
பள்ளிகளில் தற்போது அரையாண்டு தேர்வு நிறைவடைந்துள்ளது.
இதன்மூலம் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உங்களுக்கு தெரிந்திருக்கும். பொது தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாத மாணவ- மாணவிகளை நீங்கள் தேர்ச்சி பெற செய்ய வேண்டும்.
இன்னும் 2 மாதத்தில் பொதுத்தேர்வு வர உள்ளது. கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பில் வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்தது. இதனை மாற்ற வேண்டும். கல்வியில் முன்னேறிய மாவட்டமாக வேலூர் மாவட்டத்தை கொண்டு வருவதற்கு தலைமை ஆசிரியர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
பாராட்டு சான்றிதழ்
உங்களை யாரும் கட்டுப்படுத்தவில்லை. சுதந்திரமாக செயல்பட்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும்.
பள்ளிகளில் முழுமையாக புகையிலை, குட்கா போன்ற போதைப்பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளுக்கு அருகில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் உடனடியாக புகார் செய்ய வேண்டும்.
மாநில அளவில் நடந்த கலாசார போட்டியில் வேலூர் மாவட்ட மாணவ- மாணவிகள் அதிக அளவில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
முதல்பரிசும் மாவட்டத்துக்கு கிடைத்தது. இதேபோல முதல்- அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியிலும் மாணவர்களை பங்கேற்க வைக்க வேண்டும்.
ஆசிரியர்களும் தங்களுக்கான பிரிவில் கலந்து கொள்ள வேண்டும். பள்ளிகளில் புகையிலை போன்ற போதை பொருட்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்பாட்டில் இல்லாத நிலையை உருவாக்கிய 5 தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.