வேலூர் மீன் மார்க்கெட் மேற்கூரையை சீரமைக்க வேண்டும்
வேலூர் மீன்மார்க்கெட் மேற்கூரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்மார்க்கெட்
வேலூர் மீன்மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு கடலோர பகுதிகளில் இருந்து மீன்கள் கொண்டு வரப்படுகிறது. அதைத்தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து ரெயில், டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் மீன்கள் விற்பனைக்காக வருகின்றன. இங்கிருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு மீன்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. வேலூர் மீன்மார்க்கெட்டில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ பிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். அதேபோன்று அதிகளவு மீன்கள் விற்பனையாகும்.
ஆனால் ஆடி அமாவாசையையொட்டி நேற்று வேலூர் மீன்மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. அதனால் வழக்கத்தை விட மீன்கள் குறைவாக விற்பனையானது.
கடந்த வாரத்தை போன்று மீன்களின் விலை காணப்பட்டது. ஒரு கிலோ வஞ்சிரம் பெரிய மீன் ரூ.1,600-க்கும், நடுத்தர வஞ்சிரம் ரூ.700-க்கும், இறால் ரூ.350 முதல் ரூ.400-க்கும், அயிலை, கட்லா மீன்கள் ரூ.150-க்கும் விற்பனையானது. சங்கரா மீன் ரூ.250 முதல் ரூ.350-க்கும், சுறா ரூ.450-க்கும், விறால் ரூ.400-க்கும், நெத்திலி ரூ.280-க்கும், நண்டு ரூ.300 முதல் ரூ.350-க்கும், மத்திமீன் ரூ.160-க்கும் நெய்மீன், ஜிலேபி ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
மேற்கூரையை சீரமைக்க வேண்டும்
வேலூர் மீன்மார்க்கெட்டிற்கு மீன்கள் வாங்க தினமும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மீன்மார்க்கெட்டில் உள்ள மேற்கூரை ஆங்காங்கே உடைந்தும், சேதமடைந்தும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் மழை காலங்களில் மீன்கள் வாங்க வரும் பொதுமக்களும், அங்கு கடை வைத்துள்ள வியாபாரிகளும் மழையில் நனையும் நிலை காணப்படுகிறது. மேலும் மார்க்கெட்டின் உள்ளே தண்ணீர் புகுந்து மழைநீர் தேங்கி நிற்கிறது.
எனவே பொதுமக்கள், வியாபாரிகளின் நலன் கருதி சேதமடைந்து காணப்படும் மேற்கூரையை சீரமைக்க வேண்டும். மேலும் அதனை அகற்றி விட்டு புதிய மேற்கூரை அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.