வேலூர் சி.எம்.சி. காலனியில் சாலை பணிகளை ஒரு வாரத்துக்குள் முடிக்க மேயர் அறிவுறுத்தல்
வேலூர் சி.எம்.சி.காலனியில் சாலை பணிகளை ஒரு வாரத்துக்குள் முடிக்க வேண்டும் என மேயர் அறிவுறுத்தினார்.
வேலூர்
வேலூர் சி.எம்.சி.காலனியில் சாலை பணிகளை ஒரு வாரத்துக்குள் முடிக்க வேண்டும் என மேயர் அறிவுறுத்தினார்.
வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலம் கலெக்டர் அலுவலகம் அருகே 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் சுஜாதா நேற்று அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த பணியின் தற்போதைய நிலவரம், நிறைவடையும் நாள் குறித்தும் அதிகாரிகள், ஒப்பந்ததாரரிடம் மேயர் கேட்டறிந்தார்.
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள பகுதிகளில் சாலையோரம் மழைநீர் தேங்காதவாறு சாலை அமைக்க வேண்டும். அதைத்தொடர்ந்து தென்றல் நகரில் பணிகளை மேற்கொண்டு விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறினார்.
அதன்பின்னர் மேயர் சுஜாதா, சி.எம்.சி. காலனியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள பொதுமக்கள் இப்பகுதியில் முக்கிய சாலை பல மாதங்களாகியும் அமைக்கப்படவில்லை. அதனால் இருசக்கர வாகனங்கள் நடைபாதையில் சென்று வருகிறார்கள். ஆட்டோ, கார், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வர இயலாத நிலை காணப்படுகிறது. இந்த பணிகள் எப்போது நிறைவடையும் என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு மேயர், சாலை பணியை ஒருவாரம் முதல் 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தி உள்ளேன். சாலை பணிகள் குறித்த நாட்களுக்குள் முடிவடையும் என்று தெரிவித்தார்.
ஆய்வின் போது மாநகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் ஆறுமுகம் மற்றும் பலர் உடனிருந்தனர்.
2 காலம்.