வேலூர் மாநகராட்சியில் ரூ.949 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்


வேலூர் மாநகராட்சியில் ரூ.949 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்
x

வேலூர் மாநகராட்சியில் நேற்று ரூ.949 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலூர்

பட்ஜெட் தாக்கல்

வேலூர் மாநகராட்சியில் 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் சுஜாதா தலைமை தாங்கினார். துணை மேயர் சுனில்குமார், மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநகராட்சி வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் ரவிக்குமார் பட்ஜெட் நகல் பெட்டியை மேயரிடம் ஒப்படைத்தார். அதனை மேயர் சுஜாதா பெற்றுக்கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.949 கோடி

வேலூர் மாநகராட்சியில் வருவாய் மற்றும் மூலதன நிதி, குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் நிதி, ஆரம்பக் கல்வி நிதி போன்றவற்றுக்கு கடந்த நிதியாண்டில் ரூ.886 கோடியே 86 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியாண்டில் ரூ.949 கோடியே 31 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக ரூ.62 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மாநகராட்சி பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கு பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தனிக்கழிவறை அமைக்கப்படும். மாநகராட்சி பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' இல்லாத பள்ளிகளுக்கு 'ஸ்மார்ட் கிளாஸ்' அமைக்கப்பட உள்ளது. அவர்களுக்கு 'அபாகஸ்' மற்றும் 'யோகா' சிறப்பு பயிற்றுநர்கள் மூலம் கற்றுத்தரப்படும். மாநகராட்சி வரி வசூலில் நடப்பு நிதி ஆண்டில் கூடுதலாக வருவாய் ஈட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதாரத்துக்கு...

மாநகராட்சியில் பொது சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 84 லட்சம் மதிப்பீட்டில் 9 சமுதாய மற்றும் பொது கழிப்பிடம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் வளம் மீட்பு மையம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியை தூய்மை மாநகராட்சியாக மேற்கொள்ள ரூ.35 கோடியே 90 லட்சத்தில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தாராபடவேடு, தொரப்பாடி, கொணவட்டம், அலமேலுமங்காபுரம் ஆகிய பகுதிகளில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கொண்டு வந்து பராமரிக்க ரூ.40 லட்சம் செலவில் 'பட்டி' அமைக்கப்படும். தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு கருத்தடை செய்வதற்காக கருத்தடை மையம் 3 மண்டலங்களில் ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

அறிவியல் பூங்கா

கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு வேலூர் மாநகராட்சி முழுவதும் 175 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும். மேலும் ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்பில் 2 குளங்கள் சீரமைத்தல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 60 வார்டுகளிலும் ரூ.4 கோடியே 57 லட்சத்தில் புதிய மின் விளக்குகள் நிறுவப்பட உள்ளது.

பிரதான சாலைகளில் உள்ள சுவர்களில் ரூ.50 லட்சம் செலவில் வண்ண ஓவியங்கள் வரைந்து மாநகராட்சி அழகுப்படுத்தப்பட உள்ளது. வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே 'நம்ம வேலூர், நம் பெருமை' என்ற வாசகமுடைய 'செல்பி பாயிண்ட்' அமைக்கப்படும். பொதுமக்கள் பங்களிப்புடன் முக்கிய இடங்களில் ரூ.1 கோடியே 20 லட்சத்தில் அழகிய நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் உள்ள அகலமான சாலைகளில் சாலையோரம் பூங்காக்கள் அமைக்கப்படும். ரூ.1 கோடியே 25 லட்சத்தில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. 92 கிலோ மீட்டருக்கு புதிய சாலை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 15-வது மத்திய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.37 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் 34 பணிகள் நடைபெற்று வருகிறது.

பாதாள சாக்கடை பணிகள்

60 வார்டுகளிலும் மழைநீர் வடிகால் அமைப்பதற்கு சுமார் 14 கிலோமீட்டர் தூரம் ரூ.69 கோடியே 13 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மாநகராட்சியில் ரூ.690 கோடியே 91 லட்சத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மண்டலக் குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, கவுன்சிலர் கணேஷ்சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களும், மகளிர் உரிமைத்தொகை வழங்குவதாக அறிவித்ததற்கு நன்றியையும் மேயர், துணை மேயர் தெரிவித்தனர்.


Next Story