வேலூர் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதல்
தீபாவளி பொருட்கள் வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பூக்கள் விலையும் உயர்ந்துள்ளது.
தீபாவளி பொருட்கள் வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பூக்கள் விலையும் உயர்ந்துள்ளது.
மக்கள் கூட்டம்
தீபாவளி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வேலூரில் பொருட்கள் வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. லாங்குபஜார், நேதாஜி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் ஏராளமானவர்கள் பூஜை பொருட்கள், மளிகை பொருட்களை வாங்கிச் சென்றனர். இதேபோல ஜவுளிகடைகள், பட்டாசு கடைகளிலும் மக்கள் குவிந்தனர். பட்டாசு கடைகளில் நீண்டவரிசையில் நின்று பட்டாசுகளை வாங்கிச் சென்றனர்.
பல்வேறு இடங்களில் குழந்தைகள் நேற்று இரவே பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். வாணவெடிகளும் வெடிக்கப்பட்டது.
நேதாஜி பூ மார்க்கெட்டிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. வழிபாட்டுக்காகவும், தலையில் வைக்கவும் பூக்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். பண்டிகையை முன்னிட்டு மல்லி, முல்லை உள்ளிட்ட பூக்களின் விலை கடந்த வாரத்தை விட சற்று உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பூக்கள் விலை உயர்வு
அதன்படி பூக்கள் விலை (ஒருகிலோ) வருமாறு:-
சாமந்தி ரூ.40 முதல் ரூ.100 வரை, ரோஸ் ரூ.120 முதல் ரூ.150 வரை, மல்லி ரூ.700, முல்லை ரூ.700, ஜாதிமல்லி ரூ.350, கனகாம்பரம் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடைவீதிகளுக்கு மக்கள் படையெடுத்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. லாங்கு பஜாரில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.