வேலூர் மாணவர் 3-ம் இடம் பிடித்து சாதனை


வேலூர் மாணவர் 3-ம் இடம் பிடித்து சாதனை
x

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் வேலூர் மாணவர் 3-வது இடம்பிடித்துள்ளார். அவர் இருதய சிகிச்சை நிபுணராக வரவிரும்புவதாக தெரிவித்துள்ளார்.

வேலூர்

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் வேலூர் மாணவர் 3-வது இடம்பிடித்துள்ளார். அவர் இருதய சிகிச்சை நிபுணராக வரவிரும்புவதாக தெரிவித்துள்ளார்.

3-வது இடம்

தற்போது நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வேலூர் மாவட்டம், ஊசூர் அடுத்த சிவநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் பிரவீன்குமார் (வயது 19) 481 மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து பிரவீன்குமார் கூறியதாவது:-

மலையடி வாரத்தில் உள்ள சிறிய கிராமமான சிவநாதபுரம் கிராமம் எனது சொந்த ஊர். எனது தந்தை ஏழுமலை (54) விவசாயி. தாய் ஜெயலட்சுமி (45) இல்லத்தரசி. என் உடன் பிறந்தவர்கள் 4 அக்கா உள்ளனர். சிறிய விவசாய குடும்பத்தில் கடைசி மகனான பிறந்த நான்தான் எனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழல் உள்ளது. சிறிய வயதிலிருந்தே மருத்துவம் படிக்க வேண்டும் என ஆசை இருந்து வந்தது. கடந்த 2020-ம் ஆண்டு ஊசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்தேன்.

இருதய சிகிச்சை

10-ம் வகுப்பு தேர்வில் 456 மதிப்பெண்களும், பிளஸ்-2 தேர்வில் 462 மதிப்பெண்களும் எடுத்தேன். கடந்த ஓராண்டாக தனியார் நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்தேன். முதலில் எழுதிய நீட் தேர்வில் நான் தோல்வி அடைந்து விட்டேன். இதைத் தொடர்ந்து விடாமுயற்சியாக, இரவு பகல் பாராமல் படித்து மாநில அளவில் 3-வது இடத்தை பிடித்துள்ளேன்.

அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் மருத்துவத் துறையில் இருதய சிகிச்சை படிக்க உள்ளேன். எனக்கு சென்னை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இடம் கிடைக்கும் என நம்புகிறேன். நான் மருத்துவராக ஆன பிறகு எனது கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்ப்பேன்.

விவசாயிகள் அதிகம் கொண்ட எங்கள் ஊரில், மருத்துவ வசதி குறைவாக உள்ளது. அவசர நேரத்தில் மருத்துவமனை செல்ல வேண்டும் என்றால் ஐந்து கிலோ மீட்டர் தாண்டி செல்ல வேண்டி உள்ளது. பிரசவம் போன்ற தவிர்க்க முடியாத சூழலில் மருத்துவ சிகிச்சைக்காக எங்கள் கிராம மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். அதேபோல் எங்கள் கிராமத்தை ஒட்டி குருமலை, வெள்ளைக்கல் மலை போன்ற மலை கிராம மக்களும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கும் மருத்துவம் தடையின்றி, உடனடியாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே நான் மருத்துவம் படிப்பதில் விடாமுயற்சியாக உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story