ரூ.8 கோடி மதிப்பில் வேலூர்-ஊசூர் சாலை அகலப்படுத்தும் பணிகள்
ரூ.8 கோடி மதிப்பில் வேலூர்-ஊசூர் சாலை அகலப்படுத்தும் பணிகளை கலெக்டர் ஆய்வுசெய்தார்.
வேலூர் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.8 கோடி மதிப்பில் வேலூர்-ஊசூர் சாலை அகலப்படுத்தும் பணி, வேலூர்-ஆற்காடு சாலை சீரமைக்கும் பணிகள் உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வேலூர்-ஊசூர் சாலை அகலப்படுத்துதல், மழைநீர் வடிகால் கட்டும்பணிகளை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பணியின் தற்போதைய நிலை, நிறைவடையும் காலம் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து அவர் வேலூர்-ஆற்காடு சாலை சீரமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கலெக்டர், சாலை சீரமைக்கும் பணிகளை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் விரைந்து முடிக்க வேண்டும். சாலையின் இருபுறமும் தேவையான இடங்களில் நிழல்தரும் மரக்கன்றுகளை நட்டு முறையாக பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பிரகாஷ், இளநிலை பொறியாளர் விஜயா, வேலூர் தாசில்தார் செந்தில், மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.