வேலூர் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் மேற்கு (திருப்பத்தூர்) மாவட்ட செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி தலைமை தாங்கினார்.
இதில் பொதுப்பணிதுறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தரும் தமிழக முதல்-அமைச்ச்ா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது,
மாவட்டம் முழுவதும் பல்வேறு துறை சார்ந்து பொது மக்கள் வழங்கியுள்ள மனுக்கள் மீதான உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியானவர்களுக்கு முதல்-அமைச்சரால் நலதிட்ட உதவிகள் வழங்குவது, இதற்கு முன்னதாக மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் முதல்வர் வருகையையொட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.எம்.கதிர் ஆனந்த், சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார், ஜோலார்பேட்டை நகரமன்ற தலைவர் காவியா விக்டர் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், பிற அணி நிர்வாகிகள் உட்பட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.