சாலை அமைக்கும் பகுதியை வேலூர் மண்டல வனப்பாதுகாவலர் ஆய்வு
வாணியம்பாடி அருகே நெக்னா மலை கிராமத்திற்கு சாலை அமைக்கப்பட இருக்கும் பகுதியை வேலூர் மண்டல வனப்பாதுகாவலர் ஆய்வு செய்தார்.
வாணியம்பாடி அருகே நெக்னா மலை கிராமத்திற்கு சாலை அமைக்கப்பட இருக்கும் பகுதியை வேலூர் மண்டல வனப்பாதுகாவலர் ஆய்வு செய்தார்.
சாலை அமைக்க உத்தரவு
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த நெக்னாமலை மலை கிராம பகுதிக்கு சாலை வசதி செய்து தரவேண்டும் என்று மலைகிராம மக்கள் கடந்த 75 ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த ஆட்சியின்போது அப்போதைய அமைச்சர் கே.சி.வீரமணி, கலெக்டர் சிவன் அருள் ஆகியோர் முயற்சியால் தற்காலிக சாலை அமைக்கப்பட்டது. தொடர் மழையின் காரணமாக அந்த சாலைகள் மிகவும் சேதம் அடைந்தது. அதை தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் தலைமையில் சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதுவும் தொடர் மழையின் காரணமாக சேதமடைந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மரணமடைந்த ஒருவரை தோளி கட்டி மலைக்கு தூக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் மீண்டும் பொதுமக்கள் நிரந்தர சாலை அமைத்து தரக் கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில், சாலை அமைக்க மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாகா உத்தரவிட்டார். இந்த மலை கிராமத்திற்கு கொத்தகோட்டை ஊராட்சி, வேப்பம்பட்டான் வட்டம் முதல் நெக்னாமலை கிராமம் வரை உள்ள மொத்த தூரம் 4.40 கி.மீ. இதில் 1.60 கி.மீ தூரம் வருவாய் துறையிடமும், 2.80 கி.மீ தூரம் வனத்துறையிடமும் உள்ளது.
வனப்பாதுகாவலர் ஆய்வு
இந்த நிலையில், வனத்துறை பகுதியில் சாலை அமைக்க 2.80 கி.மீ தூரம் தடையில்லா சான்று பெற மாவட்ட நிர்வாகம், வனத்துறையிடம் விண்ணப்பித்திருந்த நிலையில், நேற்று வேலூர் மண்டல வனப் பாதுகாவலர் சுஜாதா, திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் நாக சதீஷ் கிடிஜாலா ஆகியோர் நெக்னாமலை பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது மலையில் சாலை அமைக்க கூடிய இடங்களை அளவீடு செய்தனர், மேலும் வனப்பகுதிக்கு எவ்வித இடையூறுமின்றி சாலை அமைக்கவும், அதற்கான வரைபடங்களை தயாரிக்கவும் அதிகாரிகளுக்கு அவர்கள் உத்தரவிட்டனர்.
இந்த ஆய்வின் போது ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவர் சங்கீதா பாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விநாயகம், சிவகுமார் (திட்டம்), வாணியம்பாடி வனச்சரகர் இளங்கோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.