ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க விற்பனையாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்


ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க விற்பனையாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்
x
தினத்தந்தி 16 Jun 2023 7:30 PM GMT (Updated: 17 Jun 2023 8:02 AM GMT)
கிருஷ்ணகிரி

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க விற்பனையாளர்கள், காவல் துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி கூறினார்.

கலந்தாய்வு கூட்டம்

தமிழக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி நேற்று கிருஷ்ணகிரிக்கு வந்தார். இங்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது குறித்தும், பக்கத்து மாநிலங்களாக ஆந்திரா, கர்நாடகா ஆகியவற்றிற்கு ரேஷன் அரிசி கடத்தாமல் தடுப்பது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஏகாம்பரம் ஆகியேருடன் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் பொது வினியோக திட்ட ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

இதில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி பேசியதாவது:-

தீவிர நடவடிக்கை

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க விற்பனையாளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அருகில் உள்ள ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு காவல் துறைக்கும், வருவாய்த்துறையினருக்கும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். ரேஷன் அரிசி யாரேனும் பதுக்கி வைக்கும் தகவல் தெரிந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், கிருஷ்ணகிரி சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணவேணி, திபாகர், மற்றும் வட்ட வழங்கல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story