வெங்கடேச பெருமாள் கோவில் மண்டலாபிஷேகம் நிறைவு
வெங்கடேச பெருமாள் கோவில் மண்டலாபிஷேகம் நிறைவுபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தை அடுத்த கீழப்புலியூரில் எழுந்தருளியுள்ள புலியூர் திருப்பதியான பூமாதேவி, கோதாதேவி, பத்மாவதி சமேத வெங்கடேசபெருமாள் கோவில் புதுப்பிக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டல பூஜைகள் தொடர்ந்து 48 நாட்கள் நடந்தன. மண்டலாபிஷேக நிறைவு நிகழ்ச்சியான நேற்று முன்தினம் சுதர்சன ஹோமம் மற்றும் சாற்றுமறை, திராவிட வேதபாராயணம் நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று வைகாசி மாத பிறப்பு மற்றும் விஷ்ணுபதி புண்ணியகாலத்தை முன்னிட்டு பெருமாளுக்கு திருமஞ்சண நிகழ்ச்சி, சிறப்பு அலங்காரமும், மகாதீபாராதனையும் நடந்தது. இரவில் வெங்கடேசபெருமாள் உற்சவ மூர்த்தி வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு பிரகார உலா நடந்தது. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில செயலாளர் வழக்கறிஞர் சீனிவாச மூர்த்தி மற்றும் புலியூர் திருப்பதி கோவில் ஸ்தானீகர் டி.என்.கோபாலன் அய்யங்கார், வாஸ்து மற்றும் ஜோதிட நிபுணர் ஸ்ரீராம் ஆதித்யா மற்றும் பட்டாச்சாரியார்கள், கிராம மக்கள், கிராம முக்கியஸ்தர்கள், உபயதாரர்கள் கலந்து கொண்டனர்.