மேட்டூரில் துணிகரம்: அனல்மின் நிலைய என்ஜினீயர் வீட்டில் நகை- பணம் கொள்ளை-பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை
மேட்டூரில் அனல்மின் நிலைய என்ஜினீயர் வீட்டில் நகை- பணம் கொள்ளை போனது. வீட்டில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
மேட்டூர்:
அனல்மின் நிலைய என்ஜினீயர்
ேசலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலையத்திற்கு சொந்தமான குடியிருப்பு மேட்டூரை அடுத்த தொட்டில்பட்டியில் உள்ளது. அங்கு அனல் மின் நிலைய உதவி செயற்பொறியாளரான சந்திரகலா குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு சேலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.
நேற்று திரும்பி வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.
கொள்ளை
பீரோவில் இருந்த நகைகள், பணம் கொள்ளை போய் இருந்தது. இதுதொடர்பாக கருமலைக்கூடல் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடங்களை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.
அடுத்தடுத்து கைவரிசை
இதற்கிடையே அதே அனல்மின் நிலையத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரிந்து வரும் கதிரேசன் வீட்டிலும் நகை, பணம் கொள்ளை போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மேலும் 3 வீடுகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் தொடர்பாகவும், எவ்வளவு நகை, பணம் கொள்ளை போனது என்பது தொடர்பாகவும் கருமலைக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டூர் அனல்மின் நிலைய அலுவலர்கள் குடியிருப்பில் அடுத்தடுத்து நடந்த இந்த துணிகர சம்பவங்கள் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.