பவானி அருகே துணிகரம்; மின்வாரிய அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 35¼ பவுன் நகை கொள்ளை


பவானி அருகே துணிகரம்; மின்வாரிய அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 35¼ பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 14 Jun 2023 3:23 AM IST (Updated: 14 Jun 2023 12:13 PM IST)
t-max-icont-min-icon

பவானி அருகே மின்வாரிய அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 35¼ பவுன் நகையை துணிகரமாக கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு

பவானி

பவானி அருகே மின்வாரிய அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 35¼ பவுன் நகையை துணிகரமாக கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மின்வாரிய அதிகாரியின் வீடு

பவானி அருகே உள்ள சித்தோடு குமிலாம்பரப்பு அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 56). இவர் சித்தோட்டில் உள்ள தெற்கு மின்வாரிய பிரிவில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கோவிந்தராஜ் தனது குடும்பத்தினருடன் கடந்த 9-ந் தேதி திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு் அனைவரும் நேற்று முன்தினம் மதியம் வீடு திரும்பியுள்ளனர்.

35¼ பவுன் நகைகள் கொள்ளை

வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியுடன் உள்ளே சென்றனர். அங்கு பீரோ உடைக்கப்பட்டு் திறந்து கிடந்தது. பீரோவை பார்த்தபோது அதிலிருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. உள்ளே வைக்கப்பட்டு இருந்த 35¼ பவுன் நகைகளை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கோவிந்தராஜ் சித்தோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

போலீசார் வலைவீச்சு

கோவிந்தராஜின் வீடு கடந்த 9-ந் தேதி முதல் பூட்டி கிடப்பதை மர்மநபர்கள் நோட்டமிட்டு் வந்துள்ளனர். இந்த நிலையில் இரவு நேரத்தில் அங்கு சென்று வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் படுக்கையறைக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 35¼ பவுன் நகைகளை துணிகரமாக கொள்ளையடித்துவிட்டு் தப்பி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்துவிட்டு சென்ற மர்மநபர்களை வலைவீசிதேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story