கம்பம் அருகே துணிகரம்விவசாயி வீட்டில் பூட்டை உடைத்து 52 பவுன் நகை- ரூ.1¾ லட்சம் கொள்ளை :மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
கம்பம் அருகே விவசாயி வீட்டில் பூட்டை உடைத்து 52 பவுன் நகை-ரூ.1¾ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசாா் தேடி வருகின்றனர்.
விவசாயி வீட்டில் பூட்டு உடைப்பு
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டி சொசைட்டி தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 61). பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது ஏலக்காய் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி கண்ணீஸ்வரி. கணவன்-மனைவி இருவரும் மட்டும் தனியாக வசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இவர்கள், பெரியகுளம் அருகே வடபுதுப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றனர். பின்னர் மாலையில் இளங்கோவன் மட்டும் வீட்டிற்கு வந்தார். இதையடுத்து முன் கதவை திறந்து அவர் உள்ளே சென்றார். அப்போது வீட்டில் பக்கவாட்டில் இருந்த கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
நகை-பணம் கொள்ளை
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அதில் அலமாரிகள் திறக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த 52 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது. இதுகுறித்து அவர் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலை மணி, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். பின்னர் தேனியில் இருந்து கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர் பூட்டு உடைக்கப்பட்ட கதவு மற்றும் அலமாரியில் பதிவான கைரேகைகளை ஆய்வு செய்தார்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
மோப்ப நாய் கொள்ளை நடந்த வீட்டில் இருந்து அங்குள்ள முக்கிய வீதி வழியாக ஓடி சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. போலீசார் விசாரணை நடத்தியதில், ஆள் இல்லாததை நோட்டமிட்ட மா்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயி வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.